உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: சிந்து 3-வது வெற்றி


உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்:  சிந்து 3-வது வெற்றி
x
தினத்தந்தி 15 Dec 2017 11:15 PM GMT (Updated: 15 Dec 2017 8:51 PM GMT)

10-வது உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி துபாயில் நடந்து வருகிறது.

துபாய்,

இதில் பங்கேற்றுள்ள இந்திய இளம் நட்சத்திரம் பி.வி.சிந்து, தனது பிரிவில் (ஏ) முதல் இரு ஆட்டங்களில் சயகா சாட்டோ, பிங்ஜியாவ் ஆகியோரை தோற்கடித்து இருந்தார். இந்த நிலையில் கடைசி லீக்கில் ஜப்பானின் அகானே யமாகுச்சியை நேற்று எதிர்கொண்டார். தொடக்கம் முதலே அபாரமாக ஆடிய சிந்து 21-9, 21-13 என்ற நேர் செட்டில் யமாகுச்சியை ஊதித்தள்ளி 3-வது வெற்றியை சுவைத்தார்.

லீக் முடிவில் ‘ஏ’ பிரிவில் முதலிடத்தை பிடித்த உலக தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் சிந்து இன்று நடக்கும் அரைஇறுதியில் ‘பி’ பிரிவில் 2-வது இடம் பெற்ற சீனாவின் சென் யுபியுடன் மோதுகிறார். 8-ம் நிலை வீராங்கனை சென் யுபியுடன் இதுவரை 5 முறை மோதியிருக்கும் சிந்து அதில் 3-ல் வெற்றி கண்டுள்ளார். கவுரவமிக்க இந்த போட்டியில் இந்தியர் யாரும் மகுடம் சூடியதில்லை என்பது நினைவு கூரத்தக்கது.

ஆண்கள் ஒற்றையரில் (‘பி’ பிரிவு) இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தனது கடைசி லீக் ஆட்டத்தில் 17-21, 21-19, 14-21 என்ற செட் கணக்கில் சீனாவின் ஷி யுகியிடம் போராடி தோற்றார். ஒரு வெற்றி கூட பெறாத ஸ்ரீகாந்த் மூன்று தோல்விகளுடன் வெளியேறினார்.

Next Story