தீபிகாவின் கதை சொல்லும் ஆவணப்படம்!


தீபிகாவின் கதை சொல்லும் ஆவணப்படம்!
x
தினத்தந்தி 16 Dec 2017 9:09 AM GMT (Updated: 16 Dec 2017 9:09 AM GMT)

வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி பற்றி உருவாகியிருக்கும் ஆவணப்படம், அதைப் பார்க்கும் பலரையும் அதிரவைக்கிறது.

விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் சாதனைகளைப் பார்க்கும் பலருக்கு, அவர்கள் அனுபவித்த கஷ்டங்கள், எதிர்கொண்ட துயரங்கள் தெரியாது.

அதனால்தானோ என்னவோ, இந்தியாவின் முன்னணி வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி பற்றி உருவாகியிருக்கும் ஆவணப்படம், அதைப் பார்க்கும் பலரையும் அதிரவைக்கிறது.

ஜார்கண்ட் மாநிலத்தில் ராத்து என்ற குக்கிராமத்தில் பிறந்த தீபிகா, வறுமையின் கோர நாக்குகளின் தீண்டலிலேயே வளர்ந்தார். பல நாட்கள் அவர் முழுமையாய் சாப்பிட்டதில்லை, அத்தியாவசிய தேவைகளைக் கூட அடைந்ததில்லை.

அதெல்லாம்தான், 12 வயது தீபிகாவுக்கு தான் தனது பெற்றோருக்கு சுமையாக இருக்கக்கூடாது என்று எண்ணவைத்திருக்கிறது, வீட்டை விட்டு வெளியேற வைத்திருக்கிறது.

உறவினர்கள் சிலரின் அறிவுறுத்தலின்பேரில் தீபிகா ஒரு வில்வித்தை அகாடமியில் இணைந்திருக்கிறார். மூங்கிலால் செய்யப்பட்ட வில், அம்பு கொண்டே பயிற்சி பெற்றிருக்கிறார். எனினும், தலைக்கு மேல் ஒரு கூரையும், மூன்று வேளையும் உறுதியாய் கிடைக்கும் உணவுமே தீபிகாவை அந்த அகாடமியில் தொடரச் செய்திருக்கின்றன.

ஆனால், வில்- அம்பை கையில் எடுத்த நான்காண்டு காலத்திலேயே உலகின் ‘நம்பர் 1’ வீராங்கனை ஆகிவிட்டார், தீபிகா.

வளர்ந்தபிறகும் தீபிகாவின் சிரமங்கள் குறையவில்லை என ‘லேடீஸ் பர்ஸ்ட்’ என்ற இந்த ஆவணப்படம் கூறுகிறது. தீபிகாவும் அவரது சக வீராங்கனைகளும் ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு கஷ்டப்பட்டுப் பயணித்தது குறித்த விவரிப்பு, ஒரு துளி.

தீபிகா வளர்ந்த, பயிற்சி பெற்ற சூழலைப் பார்க்கும்போது, அவர் உலகின் முதன்மை வீராங்கனை ஆனது பெரும் அதிசயம் என்ற உணர்வு நமக்கு எழுகிறது. விளையாட்டில் பெண்கள் ஆர்வத்துடன் ஈடுபட நாம் இன்னும் போதுமான ஊக்கம் அளிக்கவில்லை என்றே தோன்றுகிறது.

ஆனால் இந்த ஆவணப் படத்தில் தோன்றிப் பேசும் தீபிகா, முதிர்ச்சியாகவும், சக வீராங்கனைகள் மீதான அக்கறையுடனும் வார்த்தைகளை வெளிப்படுத்துகிறார்.

அதையே பிரதிபலிக்கின்றனர், ‘லேடீஸ் பர்ஸ்ட்’ ஆவணப் படத்தின் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களுமான ஷானாவும், உராஸ் பாலும்.

“விளையாட்டின் மூலம் பெண்கள் வாழ்வில் வெற்றிக்கொடி நாட்ட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்கின்றனர். பார்ப்போருக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த ஆவணப் படத்துக்கு 7 சர்வதேச விருதுகள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால், விளையாட்டு வீராங்கனைகளுக்கு உதவ இந்த ஆவணப்படம் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு சிறு தூண்டுதலாக இருந்தாலும் போதும்! 

Next Story