2018–ம் ஆண்டுக்கான பேட்மிண்டன் போட்டி அட்டவணை நெருக்கடியாக இருக்கிறது சாய்னா அதிருப்தி


2018–ம் ஆண்டுக்கான பேட்மிண்டன் போட்டி அட்டவணை நெருக்கடியாக இருக்கிறது  சாய்னா அதிருப்தி
x
தினத்தந்தி 20 Dec 2017 9:30 PM GMT (Updated: 20 Dec 2017 7:59 PM GMT)

அடுத்த ஆண்டுக்கான பேட்மிண்டன் போட்டி அட்டவணை மிகவும் நெருக்கடியாக இருப்பதாக இந்திய மங்கை சாய்னா கூறியுள்ளார்.

புதுடெல்லி,

அடுத்த ஆண்டுக்கான பேட்மிண்டன் போட்டி அட்டவணை மிகவும் நெருக்கடியாக இருப்பதாக இந்திய மங்கை சாய்னா கூறியுள்ளார்.

சாய்னா பேட்டி

ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் 3–வது பிரிமியர் பேட்மிண்டன் லீக்(பி.பி.எல்.) போட்டி நாளை மறுதினம் தொடங்கி ஜனவரி 14–ந்தேதி வரை டெல்லி, லக்னோ, கவுகாத்தி, ஐதராபாத், சென்னை ஆகிய நகரங்களில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகளில் ஒன்றான சென்னை ஸ்மா‌ஷர்ஸ், பி.வி.சிந்துவின் தலைமையில் களம் இறங்குகிறது. இந்த போட்டிக்கான கோப்பை அறிமுக விழா டெல்லியில் நேற்று நடந்தது.

இந்த விழாவில் கலந்து கொண்ட இந்திய நட்சத்திர வீராங்கனையும், அவாத் வாரியர்ஸ் அணிக்காக விளையாட உள்ளவருமான சாய்னா நேவால் நிருபர்களிடம் கூறியதாவது:–

அடுத்த ஆண்டுக்கான (2018) உலக பேட்மிண்டன் சம்மேளனத்தின் போட்டி அட்டவணை மிகவும் நெருக்கமாக இருக்கிறது. முன்னணி வீரர்களுக்கு இது உகந்த வகையில் இல்லை. நமது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றால் போதுமான ஓய்வு அவசியம். அடுத்தடுத்து இரு தொடர்களில் தொடர்ச்சியாக என்னால் விளையாட முடியாது. அப்படி பங்கேற்றாலும் வெற்றி கிடைக்காது.

பி.பி.எல். போட்டி நிறைவடைந்ததும் உடனடியாக மூன்று போட்டிகள் வருகிறது. அதன் பிறகு உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்பாக மூன்று சூப்பர் சீரிஸ் தொடர் நடக்கிறது. பேட்மிண்டன் சம்மேளனம் ஏன் இந்த மாதிரி நெருக்கடியான போட்டி அட்டவணையை உருவாக்குகிறது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. தொடர்ந்து விளையாடும் போதும், அதிக சோர்வு ஏற்படும். நிறைய சவால்களையும் சந்திக்க வேண்டி இருக்கும்.

கட்டாயப்படுத்துகிறது

ஒற்றையர் பிரிவில் உலக தரவரிசையில் முதல் 15 இடங்களில் உள்ள வீரர், வீராங்கனைகளும், இரட்டையரில் டாப்–10 ஜோடிகளும் ஆண்டுக்கு குறைந்தது 12 போட்டித்தொடரில் விளையாடியாக வேண்டும் என்று உலக பேட்மிண்டன் சம்மேளனம் கூறியுள்ளது. இதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்து இருக்கிறது. டென்னிஸ் போன்று பேட்மிண்டன் விளையாட்டையும் கொண்டு வர பேட்மிண்டன் சம்மேளனம் முயற்சிக்கிறது என்றால், டென்னிஸ் கிராண்ட்ஸ்லாமை போல் அதிக பரிசுத்தொகையுடன் 4–5 போட்டிகளை மட்டும் நடத்தியிருக்க வேண்டும். நான் பேட்மிண்டன் சம்மேளன தலைவராக இருந்திருந்தால் இதைத் தான் செய்திருப்பேன்.

காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய விளையாட்டு, உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் ஆகிய முக்கியமான போட்டிகள் அடுத்த ஆண்டு நடக்கிறது. ஒவ்வொரு இரண்டு வாரத்திற்குள்ளும் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் முழு சவால் அளிக்கும் வகையில் தயாராவது கடினம். அதுவும் ஏதாவது காயம் அடைந்து விட்டால் அவ்வளவு தான். உடல்தகுதியை எட்டுவதற்கு போதுமான நேரம் கிடைக்காத பட்சத்தில் சிறிய காயங்கள் கூட பெரியதாகி, பல போட்டிகளில் பங்கேற்க முடியாமல் செய்து விடும்.

இவ்வாறு சாய்னா கூறினார்.

கரோலின் கருத்து

ஒலிம்பிக் சாம்பியனும், தரவரிசையில் 4–வது இடம் வகிப்பவருமான ஸ்பெயினை சேர்ந்த கரோலினா மரினும் இதே கருத்தை முன்வைத்தார். ‘‘அடுத்த ஆண்டுக்குரிய போட்டி அட்டவணையை பார்த்தால், முட்டாள்தனமாக இருக்கிறது. நிறைய போட்டிகள் இருப்பதால் எல்லா வீரர், வீராங்கனைகளுக்கும் சிரமம் தான்’’ என்று கூறிய கரோலினா மரின், ‘எப்போதும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவது உண்மையிலேயே கடினம் என்பதை அறிவேன். ஆனால் தொடர்ந்து ஆட்டத்திறனை மேம்படுத்தி, தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடிக்க விரும்புகிறேன்’ என்றார்.


Next Story