குளிர்கால ஒலிம்பிக்: பெண்கள் ஐஸ் ஆக்கியில் அமெரிக்க அணி தங்கம் வென்றது


குளிர்கால ஒலிம்பிக்: பெண்கள் ஐஸ் ஆக்கியில் அமெரிக்க அணி தங்கம் வென்றது
x
தினத்தந்தி 22 Feb 2018 10:00 PM GMT (Updated: 22 Feb 2018 7:02 PM GMT)

பெண்களுக்கான ஐஸ் ஆக்கி இறுதிப்போட்டியில் அமெரிக்கா-கனடா அணிகள் மோதின.

பியாங்சாங்,

23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான 500 மீட்டர் ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் சீனா வீரர் 23 வயதான வு டாஜிங் 39.584 வினாடிகளில் இலக்கை எட்டி புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந்தார். தென்கொரியாவின் ஹவாங் டாவ்ஹியோன் 39.854 வினாடிகளில் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை பெற்றார். பெண்களுக்கான ஆயிரம் மீட்டர் ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் நெதர்லாந்து வீராங்கனை சுஜானே ஸ்கல்டிங் தங்கப்பதக்கத்தை (ஒரு நிமிடம் 29.778 வினாடி) வசப்படுத்தினார்.

நீண்ட தூர பனிச்சறுக்கு மற்றும் துப்பாக்கி சுடுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய பையத்லான் போட்டியின் பெண்களுக்கான 4 x 6 கிலோ மீட்டர் தொடர் ஓட்டத்தில் பெலாரஸ் அணி அசத்தியது. ஸ்கர்டினோ, கிர்யுகோ, ஜினரா, டார்யா ஆகியோரை கொண்ட பெலாரஸ் குழுவினர் 1 மணி 12 நிமிடம் 03.4 வினாடிகளில் முதலாவது வந்து தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டனர்.

பெண்களுக்கான ஐஸ் ஆக்கி இறுதிப்போட்டியில் அமெரிக்கா-கனடா அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் வழக்கமான நேர முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்தன. கூடுதல் நேரத்தில் யாரும் கோல் போடவில்லை. இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் அமெரிக்கா 3-2 என்ற கோல் கணக்கில் திரில் வெற்றியை பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றது. இந்த பிரிவில் அமெரிக்கா தங்கம் வெல்வது 1998-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

இதற்கிடையே, ரஷியாவின் கர்லிங் பந்தய வீரர் அலெக்சாண்டர் ருஷில்னிட்ஸ்கி, ‘மெல்டோனியம்’ என்ற ஊக்கமருந்தை பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டுள்ளார். அவர் தனது மனைவி அனஸ்டசியாவுடன் இணைந்து கர்லிங் கலப்பு பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்று இருந்தது. அந்த பதக்கத்தை ஒலிம்பிக் கமிட்டி பறித்துள்ளது.

Next Story