கற்பழிப்பு புகார் எதிரொலி: காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் அணியில் இருந்து சவும்யாஜித் நீக்கம்


கற்பழிப்பு புகார் எதிரொலி: காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் அணியில் இருந்து சவும்யாஜித் நீக்கம்
x
தினத்தந்தி 23 March 2018 10:00 PM GMT (Updated: 23 March 2018 8:48 PM GMT)

கற்பழிப்பு புகார் எதிரொலியால் காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் அணியில் இருந்து சவும்யாஜித் நீக்கப்பட்டார்.

கொல்கத்தா,

இந்தியாவின் முன்னணி டேபிள் டென்னிஸ் வீரர்களில் ஒருவரான மேற்கு வங்காளத்தை சேர்ந்த சவும்யாஜித் கோஷ் மீது கொல்கத்தாவில் உள்ள பராசத் பெண்கள் போலீஸ் நிலையத்தில் 18 வயது இளம்பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு கற்பழிப்பு புகார் அளித்தார். அதில், ‘கடந்த 3 வருடங்களாக சவும்யாஜித் கோஷ்சும், நானும் காதலித்து வந்தோம். திருமணம் செய்வதாக வாக்குறுத்தி அளித்து என்னுடன் பலமுறை உல்லாசத்தை அனுபவித்த அவர் தற்போது என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இது குறித்து பராசத் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தன் மீதான கற்பழிப்பு புகாரில் உண்மை எதுவுமில்லை என்று சவும்யாஜித் கோஷ் மறுத்தார்.

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய பிரச்சினை குறித்து விவாதிக்க இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனத்தின் செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் ‘காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான இந்திய டேபிள் டென்னிஸ் அணியில் இருந்து சவும்யாஜித் கோஷை நீக்கம் செய்ததுடன், அவரை தற்காலிக இடைநீக்கம் செய்தும் முடிவு எடுக்கப்பட்டது. போலீஸ் விசாரணை மற்றும் கோர்ட்டு வழக்கில் வெளியாகும் தீர்ப்பை பொறுத்து அவர் மீது இறுதி நடவடிக்கை எடுக்கலாம்’ என்று முடிவு மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையில் சவும்யாஜித் கோஷ்சுக்கு முறைப்படி சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள கொல்கத்தா போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

Next Story