தடதடக்கும் தடகள மின்னல்!


தடதடக்கும் தடகள மின்னல்!
x
தினத்தந்தி 14 July 2018 12:00 PM IST (Updated: 14 July 2018 12:00 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவின் இளம் தடகள மின்னல், டுட்டீ சந்த்.

ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய தென்ஆப்பிரிக்கத் தடகள வீராங்கனை காஸ்டர் செமன்யாவுக்கு உதவிக்கரம் நீட்டியிருக்கிறார், டுட்டீ சந்த். அது பற்றியும் பிற விஷயங்கள் பற்றியும் டுட்டீ சந்தின் தடதட பேட்டி...

உங்களுக்கு உதவிய வழக்கறிஞர் அணியை செமன்யாவுக்கு உதவி செய்ய அனுப்பத் தயார் என்று கூறினீர்களே? 

நான் கடந்த 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியின்போது செமன்யாவைச் சந்தித்தேன். பின்னர் நான் அவருக்கு அனுப்பிய ஒரு மின்னஞ்சலில், சர்வதேச தடகளச் சம்மேளனங்களின் கூட்டமைப்பின் புதிய கட்டுப்பாடுகளை எதிர்த்து வாதிட, நான் அவருக்கு என்னுடைய வழக்கறிஞர் அணியை அனுப்பட்டுமா என்று கேட்டேன். எனக்கு ஆங்கிலம் அவ்வளவாகத் தெரியாது. ஆனாலும் என்னுடைய செயல்பாடு செமன்யாவை மிகவும் நெகிழச் செய்துவிட்டது என்று நினைக்கிறேன். 

1936-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கத் தடைவிதிக்கப்பட்ட யூத உயரந்தாண்டுதல் வீராங்கனை மார்க்கரெட் லாம்பெர்ட் உடன் உங்களை ஒரு சேனல் மறைமுகமாக ஒப்பிட்டிருக்கிறதே? 

அதில் நான் பெருமைப்படுகிறேன், அடக்கமாக உணருகிறேன். நான் பி.டி. உஷா உடனும் ஒப்பிடப்பட்டிருக்கிறேன். அது மிகவும் ஊக்கம் அளிக்கும் விஷயம். 

கடந்த 2014-ம் ஆண்டு உங்களைச் சுற்றிவந்த சர்ச்சைகள், அவற்றுக்கு எதிரான உங்களின் போராட்டம் குறித்து...? 

இந்தியாவுக்காகப் பதக்கங்கள் வெல்ல வேண்டும். அதுதான் எப்போதும் எனது பெரிய கனவு.  நான் தினமும் பள்ளிக்கு 3 கி.மீ. தூரம் ஓடிச்சென்ற காலம், சர்ச்சைகளின் சங்கடமான காலம், 2022-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் இன்றைய காலம் எல்லாம் என் மனதில் அதே எண்ணம்தான். 

விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் வாழ்க்கை சார்ந்த திரைப்படங்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கின்றனவே? 

எனக்கும் அதற்கான வாய்ப்புகள் வந்தன. ஆனால் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தடகளத்தில்தான் எனது கவனமெல்லாம். அதற்கப்புறம் ஒருவேளை என்னைப் பற்றிய படம் உருவானால், அதற்கு, ‘ஓடப் பிறந்தவள்’ என்று தலைப்பிட்டால் நான் மகிழ்வேன்!
1 More update

Next Story