துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 4 Aug 2018 9:00 PM GMT (Updated: 4 Aug 2018 8:20 PM GMT)

இந்த ஆண்டில் மார்ச் மாதத்தில் ஒருநாள் போட்டி அந்தஸ்தை பெற்ற நேபாள கிரிக்கெட் அணி, நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடியது.

* இந்த ஆண்டில் மார்ச் மாதத்தில் ஒருநாள் போட்டி அந்தஸ்தை பெற்ற நேபாள கிரிக்கெட் அணி, நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடியது. நெதர்லாந்து–நேபாள அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆம்ஸ்டெல்வீனில் நடந்தது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த நேபாள அணி 48.5 ஓவர்களில் 216 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது. பின்னர் ஆடிய நெதர்லாந்து அணி 50 ஓவர்களில் 215 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் கடைசி பந்தில் நேபாள அணி 1 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை ருசித்தது. ஒருநாள் போட்டியில் நேபாள அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். முந்தைய போட்டியில் நெதர்லாந்து அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இதனால் இந்த போட்டி தொடர் 1–1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

* இந்திய அமெச்சூர் கபடி பெடரே‌ஷன் ஆயுட்கால தலைவராக ஜனார்த்தனன் சிங் கெலாட்டும், தலைவராக அவரது மனைவி மிருதுளா பாதுரியா கெலாட்டும் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து அர்ஜூனா விருது பெற்ற கபடி வீரர் மஹிபால்சிங் மற்றும் சிலர் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ஜிதா மித்தல், நீதிபதி ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தேசிய விளையாட்டு மேம்பாட்டு நடைமுறை விதிகளுக்கு புறம்பாக ஜனார்த்தனன் சிங் கெலாட், மிருதுளா பாதுரியா கெலாட் ஆகியோர் பதவி வகித்து வருவதால் இருவரும் தங்கள் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்படுகின்றனர் என்று அதிரடியாக உத்தரவிட்டனர். மேலும் இந்திய அமெச்சூர் கபடி பெடரே‌ஷனுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்படும் வரை நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சனாத் கவுல் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். 3 மாதத்துக்குள் புதிய விளையாட்டு விதிமுறைகளின் படி தேர்தலை நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

* பின்லாந்து நாட்டில் கடந்த மாதம் நடந்த 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் உலக தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார். அசாமை சேர்ந்த 18 வயதான ஹிமா தாஸ் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். தங்கப்பதக்கம் வென்று சாதித்த ஹிமா தாசுக்கு ஊக்கத்தொகையாக ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று ஆயில் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. வெளிநாட்டில் பயிற்சி பெற்று வரும் ஹிமா தாஸ் நாடு திரும்பியதும் அவருக்கு இந்த தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story