ஆசிய விளையாட்டு போட்டி: பேட்மிண்டனில் சாய்னா, சிந்து கால்இறுதிக்கு தகுதி


ஆசிய விளையாட்டு போட்டி: பேட்மிண்டனில் சாய்னா, சிந்து கால்இறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 25 Aug 2018 10:45 PM GMT (Updated: 2018-08-26T01:42:20+05:30)

ஆசிய விளையாட்டு போட்டியின் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோர் கால்இறுதிக்கு தகுதி பெற்றனர்.


ஆசிய விளையாட்டு போட்டி தொடரில் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், இந்தோனேஷியாவின் பிட்ரியானியை சந்தித்தார். 33 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சாய்னா நேவால் 21-6, 21-14 என்ற நேர்செட்டில் பிட்ரியானியை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் இளம் புயல் பி.வி.சிந்து 21-12, 21-15 என்ற நேர்செட்டில் இந்தோனேஷியாவின் துன்ஜூங்கை சாய்த்து கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். இந்த ஆட்டம் 35 நிமிடம் அரங்கேறியது.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் கால்இறுதியில் இந்தியாவின் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி 17-21, 21-19, 17-21 என்ற செட் கணக்கில் தென்கொரியாவின் ஷி சோல்கு-மின்யுக் காங் இணையிடம் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தது. பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி இணை 11-21, 22-24 என்ற நேர்செட்டில் சீனாவின் சென் கிங்சென்-ஜியா யிபானிடம் தோல்வி கண்டு முன்னேற்றம் காணாமல் வெளியேறினார்கள்.

பிரிட்ஜ் (சீட்டாட்டம்) போட்டி: 2 வெண்கலம் உறுதி

ஆசிய விளையாட்டு போட்டியில் அறிமுக ஆட்டமாக இடம் பெற்ற பிரிட்ஜ் (சீட்டாட்டம்) போட்டியின் தகுதி சுற்றுகள் முடிவில் இந்திய ஆண்கள் அணி 4-வது இடத்தை பிடித்தும், இந்திய கலப்பு அணிகள் முதலிடத்தை பிடித்தும் அரைஇறுதிக்கு முன்னேறின. இதன் மூலம் பிரிட்ஜ் போட்டியில் இந்தியாவுக்கு குறைந்தபட்சம் 2 வெண்கலப்பதக்கம் கிடைப்பது உறுதியாகி இருக்கிறது.

பெண்கள் ஆக்கி போட்டி

பெண்கள் ஆக்கி போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி நடப்பு சாம்பியன் தென்கொரியாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி 3-வது வெற்றியை ருசித்ததுடன் அரைஇறுதியையும் உறுதி செய்தது. 53-வது நிமிடம் வரை இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன. கடைசி நேரத்தில் இந்திய அணி அபாரமாக செயல்பட்டு அடுத்தடுத்து 3 கோல்கள் அடித்தது. இந்திய அணி தரப்பில் நவ்னீத் கவுர் 16-வது நிமிடத்திலும், குர்ஜித் 54-வது மற்றும் 55-வது நிமிடத்திலும், வந்தனா கட்டாரியா 56-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நாளை தாய்லாந்தை சந்திக்கிறது.

துப்பாக்கி சுடுதல்

துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு நேற்று ஏமாற்றமே மிஞ்சியது. ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் பிரிவில் தகுதி சுற்றில் (நிலை 2), காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற 15 வயது இந்திய வீரர் அனிஷ் பன்வாலா 9-வது இடமும், மற்றொரு இந்திய வீரர் ஷிவம் சுக்லா 11-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறாமல் வெளியேறினார்கள்.

வில்வித்தை ரிகர்வ் பெண்கள் அணிகள் பிரிவில் கால் இறுதியில் இந்திய அணி 2-6 என்ற கணக்கில் சீன தைபே அணியிடம் தோல்வி கண்டு நடையை கட்டியது.

குத்துச்சண்டை

குத்துச்சண்டை போட்டியில் பெண்களுக்கான 60 கிலோ உடல் எடைப்பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை பவித்ரா பாகிஸ்தான் வீராங்கனை பர்வீன் ருக்சனாவை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார்.

Next Story