குதிரையேற்றத்தில் இந்தியாவுக்கு 2 வெள்ளிப்பதக்கம்


குதிரையேற்றத்தில் இந்தியாவுக்கு 2 வெள்ளிப்பதக்கம்
x
தினத்தந்தி 26 Aug 2018 11:42 PM GMT (Updated: 26 Aug 2018 11:42 PM GMT)

ஆசிய விளையாட்டில் ஸ்குவாஷ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பலிக்கல் ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்றனர். அவர்களுக்குரிய பதக்கம் நேற்று வழங்கப்பட்டது.

பாலெம்பேங்,

ஆசிய விளையாட்டு போட்டியில் குதிரையேற்ற பந்தயத்தில் இந்தியாவுக்கு ‘ஜாக்பாட்’ அடித்தது. குதிரையேற்றம் போட்டியின் ‘ஜம்பிங்’ தனிநபர் பிரிவில் 27 வீரர்கள் தங்களது குதிரை மீது அமர்ந்து திறமையை வெளிப்படுத்தினர். குறிப்பிட்ட உயரத்திலான தடுப்புகளை சாதுர்யமாக குதிரைகளை துள்ளி குதித்து கடக்கச் செய்ய வேண்டும். குதிரையின் கால்கள் தடுப்பில் பட்டு தவறு நேர்ந்தால் 4 பெனால்டி புள்ளி வழங்கப்படும். இதே போல் குதிரை தாவி குதிக்க மறுத்து அதற்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டாலும் பெனால்டி கொடுக்கப்படும். இதில் குறைந்த புள்ளிகள் எடுக்கும் வீரரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

இந்த பிரிவில் இந்திய வீரர் பவாத் மிர்சா அசத்தலாக செயல்பட்டு 26.40 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை தட்டிச்சென்றார். எந்தவித பெனால்டி புள்ளியும் வாங்காமல் நேர்த்தியாக செயல்பட்ட ஜப்பானின் 42 வயதான யோஷியாகி ஒவா 22.70 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார்.

இதே போல் குதிரையேற்றத்தின் அணிகளுக்கான ஜம்பிங் பிரிவில் பவாத் மிர்சா, ராகேஷ் குமார், ஆஷிஷ் மாலிக், ஜிதேந்தர்சிங் ஆகியோர் கொண்ட இந்திய அணி மொத்தம் 121.30 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது. இதிலும் ஆதிக்கம் செலுத்திய ஜப்பான் அணிக்கே (82.40 புள்ளி) தங்கப்பதக்கம் கிடைத்தது.

1982-ம் ஆண்டுக்கு பிறகு குதிரையேற்றத்தில் தனிநபர் பிரிவில் பதக்கம் ஜெயித்த முதல் இந்தியர் என்ற பெருமையை 26 வயதான பவாத் மிர்சா பெற்றார். அவர் கூறுகையில், ‘கடைசி கட்டத்தில் செய்த தவறினால் தங்கம் வெல்ல முடியாமல் போய் விட்டது. ஆனாலும் 2 பதக்கம் வென்று இருப்பது அற்புதமான உணர்வை தருகிறது. இது இந்தியாவில் குதிரையேற்ற பந்தயத்திற்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கும்’ என்றார்.

Next Story