கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு 2–வது இடம்: 800 மீட்டர் ஓட்டத்தில் மன்ஜித் சிங் தங்கம் வென்று அசத்தல்


கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு 2–வது இடம்: 800 மீட்டர் ஓட்டத்தில் மன்ஜித் சிங் தங்கம் வென்று அசத்தல்
x
தினத்தந்தி 28 Aug 2018 10:30 PM GMT (Updated: 28 Aug 2018 7:09 PM GMT)

ஆசிய விளையாட்டில் 800 மீட்டர் ஓடடத்தில் இந்திய வீரர்கள் மன்ஜித் சிங், ஜான்சன் முறையே முதல் 2 இடங்களை பிடித்து தங்க மற்றும் வெள்ளிப்பதக்கத்தை உச்சிமுகர்ந்தனர்.

ஜகர்தா, 

ஆசிய விளையாட்டில் 800 மீட்டர் ஓடடத்தில் இந்திய வீரர்கள் மன்ஜித் சிங், ஜான்சன் முறையே முதல் 2 இடங்களை பிடித்து தங்க மற்றும் வெள்ளிப்பதக்கத்தை உச்சிமுகர்ந்தனர்.

மன்ஜித்சிங்குக்கு தங்கம்

இந்தோனேஷியாவில் நடந்து வரும் 18–வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா நேற்று மேலும் ஒரு தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தது.

தடகளத்தில் ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தின் இறுதி சுற்றில் 8 வீரர்கள் கலந்து கொண்டு ஓடினர். இதில் தொடக்கத்தில் கொஞ்சம் பின்தங்கி இருந்த இந்திய வீரர் மன்ஜித் சிங், இறுதிகட்டத்தில் துரிதமாக முன்னேறி முதலிடத்தை பிடித்தார். 1 நிமிடம் 46.15 வினாடிகளில் இலக்கை கடந்த அவரது கழுத்தை தங்கப்பதக்கம் அலங்கரித்தது. மற்றொரு இந்திய வீரர் ஜின்சன் ஜான்சன் 1 நிமிடம் 46.35 வினாடிகளில் 2–வதாக வந்து வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கினார். கத்தார் வீரர் அபுபக்கருக்கு (1 நிமிடம் 46.38 வினாடி) வெண்கலம் கிடைத்தது.

மன்ஜித் சிங்கை பொறுத்தவரை, அவர் பதக்க வெல்வார் என்ற எதிர்பார்ப்பு பெரிய அளவில் இல்லை. இப்போது மகுடம் சூடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

1982–ம் ஆண்டுக்கு பிறகு...

1982–ம் ஆண்டுக்கு பிறகு ஆசிய விளையாட்டில் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை மன்ஜித் சிங் பெற்றார். அரியானாவின் ஜின்ட் நகரில் வசிக்கும் மன்ஜித் சிங் பெரிய போட்டியில் ருசித்த முதல் பதக்கமும் இது தான்.

28 வயதான மன்ஜித் கூறுகையில், ‘எனது முந்தைய போட்டிகளின் வீடியோ காட்சிகளை பார்த்து தவறுகளை திருத்திக் கொண்டேன். இந்த போட்டிக்காக நான் நன்றாக தயாராகி இருந்தேன். ஊட்டியில் ஒன்றரை ஆண்டுகள் பயிற்சியில் ஈடுபட்டேன். முதலில் சக போட்டியாளர்களுடன் பின்தொடர்ந்து சென்று விட்டு, கடைசி 100–150 மீட்டரில் வேகத்தை அதிகரிப்பது என்ற வியூகத்துடன் செயல்பட்டேன். அதற்கு பலன் கிடைத்திருக்கிறது. ஈட்டி எறிதலில் நீரஜ்சோப்ராவின் செயல்பாடு எனக்கு உத்வேகம் அளித்தது. எனக்கு தற்போது வேலை வாய்ப்பு இல்லை.’ என்றார்.

கலப்பு பிரிவில்...

ஆசிய போட்டியில் அறிமுகமாகியுள்ள 4x400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் இந்தியா வெள்ளிப்பதக்கத்தை தட்டிச்சென்றது. வீரர்கள் முகமது அனாஸ், ஆரோக்ய ராஜீவ், வீராங்கனைகள் ஹிமா தாஸ், பூவம்மா ஆகியோர் அடங்கிய இந்திய குழு 3 நிமிடம் 15.71 வினாடிகளில் இலக்கை அடைந்து வெள்ளிப்பதக்கத்தை கையில் ஏந்தியது. இதில் ஆரோக்யராஜீவ் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது கவனிக்கத்தக்கது. பக்ரைன் அணி 3 நிமிடம் 11.89 வினாடிகளில் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கியது.

பெண்களுக்கான 5 ஆயிரம் ஓட்டத்தில் தமிழக வீராங்கனை சூர்யா ஏமாற்றம் அடைந்தார். 15 நிமிடம் 49.30 வினாடிகளில் இலக்கை கடந்து முடித்த அவர் 5–வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்றொரு இந்திய வீராங்கனை சஞ்ஜீவாணி ஜாதவ் 7–வது இடம் பெற்றார். பெண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்திய வீராங்கனை அன்னுராணி 53.93 மீட்டர் தூரம் எறிந்து 6–வது இடத்துக்கு சறுக்கினார்.

டுட்டீ சந்த் கலக்கல்

பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தின் அரைஇறுதியில் மின்னல்வேகத்தில் சீறிப்பாய்ந்த இந்திய வீராங்கனை ஒடிசாவைச் சேர்ந்த டுட்டீ சந்த் 23 வினாடிகளில் பந்தய தூரத்தை அடைந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இறுதிசுற்றுக்குள் நுழைந்துள்ள 8 பேரில் முதலிடத்தை டுட்டீ சந்த் பிடித்திருப்பதால் இன்று நடக்கும் இறுதி சுற்றில் அவர் பதக்கம் வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது. 100 மீட்டர் ஓட்டத்தில் டுட்டீ சந்தை முந்தி தங்கம் வென்றிருந்த பக்ரைன் வீராங்கனை எடிடியாங் ஒடியாங் 200 மீட்டர் ஓட்டத்திலும் இறுதிப்போட்டிக்கு வந்திருக்கிறார். ஆனால் அரைஇறுதியில் பந்தய தூரத்தை டுட்டீ சந்தை விட நூலிழை வித்தியாசத்தில் பின்தங்கி (23.01 வினாடி) எட்டினார்.

எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு இந்திய நட்சத்திர வீராங்கனை ஹிமா தாஸ், விதிமுறைக்கு புறம்பாக தவறான தொடக்கம் கண்டதால் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு, தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

ஹெப்டத்லான்

7 பந்தயங்கள் அடங்கிய ஹெப்டத்லானில் 4 பந்தயங்கள் முடிவில் சீனாவின் வாங் குயிங்லிங் 3513 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்திய வீராங்கனைகள் ஸ்வப்னா 3,481 புள்ளிகளுடன் 2–வது இடத்திலும், பூர்ணிமா 3,424 புள்ளிகளுடன் 3–வது இடத்திலும் உள்ளனர்.

இந்தியா நேற்று ஒரே நாளில் ஒரு தங்கம், 6 வெள்ளி, 2 வெண்கலப்பதக்கத்தை அள்ளியது. பதக்கப்பட்டியலில் 9 தங்கம் உள்பட மொத்தம் 50 பதக்கங்களுடன் இந்தியா 8–வது இடம் வகிக்கிறது. பதக்க வேட்டையில் ‘இரட்டை செஞ்சுரி’ அடித்த சீனா 206 பதக்கங்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.


Next Story