அடுத்த இலக்கு நோக்கி...


அடுத்த இலக்கு நோக்கி...
x
தினத்தந்தி 15 Sep 2018 11:50 AM GMT (Updated: 15 Sep 2018 11:50 AM GMT)

ஆசிய விளையாட்டுத் திருவிழா முடிவடைந்திருக்கும் நிலையில், இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகளும், அதிகாரிகளும் அடுத்த பெரிய சவாலான ஒலிம்பிக்குக்குத் தயாராகத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஒலிம்பிக்கை நோக்கிய, ‘டார்கெட் ஒலிம்பிக் போடியம் ஸ்கீம்’ எனப்படும் ஒலிம்பிக் வெற்றி மேடை இலக்குத் திட்டத்துக்கான (சுருக்கமாக ‘டாப்ஸ்’) மதிப்பீட்டுப் பணிகளை அதிகாரிகள் துவங்கியிருக்கின்றனர்.

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதை இலக்காகக் கொண்ட இத்திட்டத்தில் இருந்து சில வீரர், வீராங்கனைகள் நீக்கப்படவிருக்கிறார்கள், சிலர் சேர்க்கப்படவிருக்கிறார்கள்.

இதற்கான வேலைகள் விரைவில் தொடங்கும் என இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) பொது இயக்குநர் நீலம் கபூர் கூறுகிறார்.

பல்வேறு பிரிவு விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் செயல்பாடு குறித்து அந்த விளையாட்டு சம்மேளனங்கள் ஆய்வு செய்யும் என்று கூறப்படுகிறது. நல்ல திறனைக் கொண்ட வீரர், வீராங்கனைகள், புதிதாக ‘டாப்ஸ்’ திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். இந்தத் திட்டத்தில் ஏற்கனவே உள்ளவர்களில் சிலர் தங்கள் இடத்தைத் தக்கவைக்கும் அதேநேரத்தில், வேறு சிலர் வெளியேற வேண்டியிருக்கும் என்கிறார்கள்.

இதையொட்டி இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் செயலாளர் ஜெய் கோவ்லி கூறும்போது, ‘‘தற்போது ‘டாப்ஸ்’ திட்டத்தில் உள்ள குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகளின் செயல்பாடுகளை நாங்கள் மறுமதிப்பீடு செய்வோம்’’ என்கிறார். இதுதொடர்பாக தங்கள் சம்மேளனத் தலைவர் அஜய் சிங்குடன் பேசியிருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

‘‘ஆசிய விளையாட்டில் நமது குத்துச்சண்டை வீரர்களின் செயல்பாட்டில் தனிப்பட்ட முறையில் எனக்குத் திருப்தி இல்லை. அதுகுறித்து நான் எங்கள் சம்மேளனத் தலைவருடன் பேசியிருக்கிறேன். வீரர், வீராங்கனைகளின் திறனை மேம்படுத்த அடுத்து என்ன செய்வது என்று நாங்கள் உட்கார்ந்து விவாதித்து முடிவெடுப்போம்’’ என்றார் கோவ்லி.

‘டாப்ஸ்’ கமிட்டிக்கு உட்பட்ட ஒரு தேசிய விளையாட்டு சம்மேளனத்தின் அலுவலர் கூறுகையில், சம்பந்தப்பட்ட எல்லா அமைப்புகளும் தங்கள் ஆய்வுப்பணிகளை விரைவில் முடித்துவிடும் என்றார்.

‘நமது வீரர், வீராங்கனைகளின் செயல்பாடுகள் அனைத்தும் ஆய்வு செய்யப்படும். ஒவ்வொருவர் பற்றியும் தனித்தனியாக அலசப்படும். ‘டாப்ஸ்’ திட்டத்தில் சிலர் புதிதாக இடம்பெறுவார்கள், சிலர் நீக்கப்படுவார்கள். இதற்கான அமைப்புக் குழுவும், தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் உறுப்பினர்களும் இவ்விஷயத்தில் இறுதி முடிவை எடுப்பார்கள்’ என்று ‘சாய்’ வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகிறார்.

‘டாப்ஸ்’ திட்டத்தில் யாரையும் சேர்க்கும் அதிகாரம் தேசிய விளையாட்டு சம்மேளனங்களுக்கு இல்லை, ஆனால் சிலரைச் சேர்க்கும்படி அவற்றால் பரிந்துரைக்க முடியும் என்று அவர் விளக்கம் அளிக்கிறார்.

தற்போது ‘டாப்ஸ்’-ல் 196 வீரர், வீராங்கனைகள் இருக்கிறார்கள். இவர்களில் 150 பேர், ஆசிய விளையாட்டுப் போட்டி வரை இத்திட்டத்தில் இருந்தவர்கள்.

இவர்களில் யார் ஒலிம்பிக் சவாலை எதிர்கொள்ளத் தகுதியானவர்கள் என்று தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் அறிந்து பரிந்துரை செய்யும். அதில், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இறுதி முடிவு எடுக்கும்.

ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற டுட்டீ சந்த், ராகி சர்னோபத் ஆகியோர் ‘டாப்ஸ்’ திட்டத்தில் இடம்பெற்றவர்கள் இல்லை. ஆனால் இனிமேல் அவர்களுக்கு இதில் இடம் கிடைக்கும் எனத் தெரிகிறது.

வூஷு விளையாட்டில் ஆசியப் போட்டியில் இந்திய அணி ஓரளவு நன்றாகச் செயல்பட்டு நான்கு வெண்கலப் பதக்கங்களைப் பெற்றது. ஆனால் ஒலிம்பிக்கில் இந்த விளையாட்டு இல்லாததால், ‘சாய்’ திட்டத்தில் இருந்து நீக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

ஆனாலும் வூஷு தேசியப் பயிற்சியாளர் குல்தீப் ஹண்டு நம்பிக்கை தெரிவிக்கிறார்...

‘‘எங்கள் விளையாட்டு நீக்கப்படாது என்று விளையாட்டுத் துறைச் செயலாளர் ராகுல் பட்நாகர் உறுதி அளித்திருக்கிறார். இதுதொடர்பாக நாங்கள் விளையாட்டு அமைச்சகத்துடன் விவாதித்து வருகிறோம்.’’

‘டாப்ஸ்’ திட்டத்தில் இந்திய ஆண்கள் ஆக்கி அணி உள்ளது, ஆனால் பெண்கள் ஆக்கி அணிக்கு ஆசிய விளையாட்டுப் போட்டி வரை இதில் இடம் கிட்டவில்லை. இந்தோனேஷியாவில் இந்திய ஆக்கி வீராங்கனைகளின் சிறப்பான செயல்பாடு காரணமாக, அவர்கள் இத்திட்டத்துக்குள் கொண்டு வரப்படுவார்கள் என்று ஆக்கி இந்தியா அமைப்பு எதிர்பார்க்கிறது.

அந்த அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி எலினா நோர்மன் இதுபற்றி, ‘‘டாப்ஸ்’-ல் பெண்கள் ஆக்கி அணியை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று இந்திய விளையாட்டு ஆணையத்தை ஆரம்பம் முதலே ஆக்கி இந்தியா அமைப்பு வலியுறுத்தி வருகிறது. தற்போது நம் பெண்கள் வெள்ளிப் பதக்கம் வென்று வந்திருக்கும் நிலையில், நாங்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்!’’ என்கிறார்.

ஆசிய போட்டியில் பதக்க சாதனை படைத்த நம்மவர்கள், ஒலிம்பிக்கிலும் சாதிக்கத் தயார்ப் படுத்த வேண்டும்! 

Next Story