அவசர கொண்டாட்டத்தால் தங்கப்பதக்கத்தை இழந்த தமிழக கபடி அணி

அவசர கொண்டாட்டத்தால் தங்கப்பதக்கத்தை தமிழக கபடி அணி இழந்தது.
புனே,
‘கேலோ’ இந்தியா இளையோர் விளையாட்டு புனேயில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான கபடி போட்டியின் (21 வயதுக்குட்பட்டோர்) இறுதி சுற்றில் தமிழக அணி, சண்டிகாருடன் நேற்று மோதியது. இந்த ஆட்டத்தில் வழக்கமான நேரம் முடிவில் 36-36 என்ற புள்ளி கணக்கில் சமநிலை ஏற்பட்டது. இதையடுத்து கூடுதலாக ஒதுக்கப்பட்ட 3 நிமிடத்தில் ஆட்டம் 38-38 என்ற கணக்கில் மறுபடியும் சமநிலை நீடித்தது. இதனால் மீண்டும் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் கடைசி ரைடில் சண்டிகார் வீரரை தமிழக அணியினர் மடக்கி பிடித்தனர்.
இதனால் தமிழக அணி 41-40 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றதாக தமிழக அணியின் மாற்று ஆட்டக்காரர்கள் மற்றும் பயிற்சியாளர், உதவியாளர்கள் ஆடுகளத்தில் நுழைந்து வீரர்களை தூக்கி வைத்து மகிழ்ச்சியில் கொண்டாடினர். ஆனால் நடுவர் அனுமதிக்கும் முன்பே மாற்று ஆட்டக்காரர்கள் உள்ளே நுழைந்ததால் சர்ச்சை கிளம்பியது. இதையடுத்து அந்த ரைடு ரத்து செய்யப்பட்டு கோல்டன் ரைடு முறை கொண்டு வரப்பட்டது. இதற்காக போடப்பட்ட டாசில் வென்ற சண்டிகார் வீரர் ‘கோல்டன் ரைடு’ மூலம் ரைடுக்கு சென்றார். இந்த ரைடில் முதல் லைனை தொட்டாலே போனஸ் புள்ளி வழங்கப்படும்.
சண்டிகார் வீரர் போனஸ் புள்ளியை எடுத்து விடக்கூடாது என்பதற்காக தமிழக வீரர் அவரை பிடிக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. இதனால் கிடைத்த ஒரு புள்ளியின் உதவியுடன் சண்டிகார் 41-40 என்ற புள்ளி கணக்கில் தமிழகத்தை வீழ்த்தியது. கடைசி நிமிடத்தில் அதிகாரிகள், மாற்று ஆட்டக்காரர்கள் செய்த தவறினால் தமிழக அணிக்கு மயிரிழையில் தங்கப்பதக்கம் நழுவிப்போனது.
Related Tags :
Next Story