துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 13 Feb 2019 9:00 PM GMT (Updated: 13 Feb 2019 8:58 PM GMT)

ஹாமில்டனில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கடைசி ஓவரில் 16 ரன் தேவைப்பட்ட நிலையில் இந்தியா 11 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

* டெல்லி கிரிக்கெட் சங்க தேர்வு குழு தலைவரும், இந்திய முன்னாள் வீரருமான அமித் பண்டாரியை நண்பர்களுடன் வந்து தாக்கிய 23 வயதுக்குட்பட்ட அணி வீரரான அனுஜ் டேதாவுக்கு ஆயுட்கால தடை விதிக்கப்படுவதாக டெல்லி கிரிக்கெட் சங்கம் நேற்று அறிவித்தது. டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் அங்கீகாரம் பெற்ற கிரிக்கெட் மற்றும் கிளப் போட்டிகளில் அவர் இனி கலந்து கொள்ள முடியாது.

*இந்தியா ‘ஏ’- இங்கிலாந்து லயன்ஸ் அணிகள் இடையிலான முதலாவது அதிகாரபூர்வற்ற டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில் 2-வது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டி மைசூரில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய ஏ அணி ஆட்ட நேர இறுதியில் 84.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 282 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் லோகேஷ் ராகுல் 81 ரன்களிலும், அபிமன்யூ ஈஸ்வரன் 117 ரன்களிலும், பிரியாங்க் பன்சால் 50 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். 2-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

*ஹாமில்டனில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கடைசி ஓவரில் 16 ரன் தேவைப்பட்ட நிலையில் இந்தியா 11 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. களத்தில் இருந்த இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கடைசி ஓவரின் 3-வது பந்தில் ஒரு ரன் ஓட மறுத்தது சர்ச்சையாக கிளம்பியது. இது குறித்து நேற்று விளக்கம் அளித்த தினேஷ் கார்த்திக், ‘என்னால் அடுத்த பந்தில் சிக்சர் அடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அதனால் தான் ஒரு ரன்னுக்கு ஓடவில்லை. ஆனால் நான் நினைத்த மாதிரி நடக்காமல் போய் விட்டது. விளையாட்டில் இது எல்லாம் சகஜம்’ என்றார்.

*இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டனும், மூன்று முறை ஒலிம்பிக்கில் பங்கேற்றவருமான என்.முகேஷ்குமாரும், அவரது சகோதரரும் இந்தியன் ஏர்லைன்சில் வேலை வாய்ப்பு பெற்றதற்காக வழங்கிய சாதி சான்றிதழ் போலியானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் மீது ஐதராபாத்தில் உள்ள போவென்பாலி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

*5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடரில் நேற்றிரவு மும்பையில் அரங்கேறிய 75-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி) அணி 2-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டியை தோற்கடித்து 7-வது வெற்றியை பெற்றது. இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா-கோவா (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

*கிரிக்கெட் உலகில் தலைச்சிறந்த பீல்டர்களில் ஒருவராக திகழ்ந்த தென்ஆப்பிரிக்காவின் ஜான்டி ரோட்ஸ், தன்னை கவர்ந்த சிறந்த 5 பீல்டர்களின் பெயர் விவரத்தை வெளியிட்டுள்ளார். அதில் இடம் பிடித்துள்ள ஒரே இந்தியரான சுரேஷ் ரெய்னாவுக்கு முதலிடம் வழங்கியுள்ளார். ‘ரெய்னா கிரிக்கெட் விளையாட தொடங்கியதில் இருந்தே நான் அவரது மிகப்பெரிய ரசிகர். வெயிலிலும் தயக்கமின்றி ‘டைவ்’ அடித்து பீல்டிங் செய்வதில் வல்லவர். பல சிறப்பான கேட்ச் செய்துள்ளார்’ என்று ரோட்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார். சைமன்ட்ஸ் (ஆஸ்திரேலியா), பால் காலிங்வுட் (இங்கிலாந்து), டிவில்லியர்ஸ், கிப்ஸ் (இருவரும் தென்ஆப்பிரிக்கா) ஆகியோர் அவருக்கு பிடித்த மற்ற பீல்டர்கள் ஆவர்.


Next Story