உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கம் வென்று உலக சாதனை - ஒலிம்பிக் இடத்தையும் உறுதிசெய்தார்


உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கம் வென்று உலக சாதனை - ஒலிம்பிக் இடத்தையும் உறுதிசெய்தார்
x
தினத்தந்தி 24 Feb 2019 11:15 PM GMT (Updated: 24 Feb 2019 9:58 PM GMT)

உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தார்.

புதுடெல்லி,

டெல்லியில் நடந்து வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் 16 வயதான சவுரப் சவுத்ரி புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தார்.

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் 61 நாடுகளை சேர்ந்த 500 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பந்தயத்தில் இந்திய இளம் வீரர் சவுரப் சவுத்ரி நேற்று பிரமாதப்படுத்தினார். இதன் இறுதி சுற்றுக்கு 8 பேர் தகுதி பெற்று இருந்தனர். இதில் இலக்கை துல்லியமாக சுடுவதில் கச்சிதமாக செயல்பட்ட சவுரப் சவுத்ரி மொத்தம் 245 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இது புதிய உலக சாதனையாகவும் அமைந்தது. இதற்கு முன்பு உக்ரைன் வீரர் ஒமெல்சக் ஓலே 243.6 புள்ளி எடுத்ததே உலக சாதனையாக இருந்தது. அதை சவுரப் சவுத்ரி முறியடித்தார். இதன் மூலம் இந்த பிரிவில் இந்தியாவுக்கான ஒலிம்பிக் கோட்டாவையும் அவர் உறுதி செய்தார்.

மொத்தம் 24 ரவுண்ட் சுட்ட சவுரப் சவுத்ரி சராசரியாக ஒவ்வொரு ரவுண்டிலும் 10.2 புள்ளி வீதம் எடுத்து அசத்தினார். 2-வது இடத்தை பிடித்த செர்பியா வீரர் டாமிர் மிகெக்கும் (239.3 புள்ளி) ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றார். முன்னாள் ஒலிம்பிக் சாம்பியனான சீன வீரர் வெய் பாங் 215.2 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பெற்று வெண்கலப்பதக்கத்தை வசப்படுத்தினார். மற்ற இந்திய வீரர்கள் அபிஷேக் வர்மா, ரவிந்தர்சிங் ஆகியோர் தகுதி சுற்றை தாண்டவில்லை.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த 16 வயதான சவுரப் சவுத்ரி கடந்த ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டு மற்றும் இளையோர் ஒலிம்பிக்கில் சாம்பியன் பட்டத்தை வென்றவர் ஆவார். மேலும் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப்பிலும் உலக சாதனை அவரது வசமே உள்ளது. நடப்பு தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும். ஏற்கனவே அபுர்வி சண்டிலா 10 மீட்டர் ஏர்ரைபிள் பிரிவில் தங்கம் வென்று இருந்தார்.

வெற்றிக்கு பிறகு சவுரப் சவுத்ரி கூறுகையில், ‘ஒலிம்பிக் தகுதி இடம் பற்றியோ அல்லது உலக சாதனை படைக்க வேண்டும் என்பது பற்றியோ நான் ஒரு போதும் சிந்திக்கவில்லை. முடிந்த அளவுக்கு எனது சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்பினேன்’ என்று குறிப்பிட்டார்.

ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலை பிரிவில் இந்திய வீரர்களுக்கு சோகமே மிஞ்சியது. பாருல் குமார், சஞ்சீவ் ராஜ்புத் ஆகிய இந்திய வீரர்கள் தகுதி சுற்றில் முறையே 22 மற்றும் 25-வது இடங்களுக்கு தள்ளப்பட்டு வெளியேற்றப்பட்டனர்.

இந்த பிரிவில் ஹங்கோரி வீரர் 22 வயதான இஸ்ட்வான் பெனி தங்கப்பதக்கமும் (459.1 புள்ளி), ரஷியாவின் செர்ஜி காமன்ஸ்கி வெள்ளிப்பதக்கமும் (459 புள்ளி), இத்தாலியின் மார்கோ டி நிகோலோ வெண்கலப்பதக்கமும் (444.5 புள்ளி) கைப்பற்றினர். அத்துடன் இவர்கள் மூன்று பேரும் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான தங்களது நாட்டுக்குரிய தகுதி இடத்தையும் உறுதி செய்தனர்.

பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் எதிர்பார்க்கப்பட்ட இந்திய ‘இளம் புயல்’ மானு பாகெர் ஏமாற்றம் அளித்தார். தகுதி சுற்றில் 2-வதாக வந்த மானு பாகெர் 8 பேர் கொண்ட முக்கியமான இறுதிப்போட்டியில் தடுமாற்றத்திற்கு உள்ளானார். முடிவில் அவர் 22 புள்ளிகளுடன் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். 17 வயதான மானு பாகெர், காமன்வெல்த் விளையாட்டு சாம்பியன் ஆவார். கடந்த ஆண்டு உலக கோப்பையில் 2 தங்கம் வென்று வரலாறு படைத்தது நினைவு கூரத்தக்கது.

இதில் ஹங்கேரி வீராங்கனை வெரோனிகா மாஜோர் 40 புள்ளிகள் எடுத்து தங்கப்பதக்கத்துடன் புதிய உலக சாதனையும் நிகழ்த்தினார். மேலும் ஒலிம்பிக் போட்டிக்கான இடத்தையும் வசப்படுத்தினார். சீனாவின் ஜிங்ஜிங் ஸாங் வெள்ளிப்பதக்கமும் (33 புள்ளி), ஈரானின் ஹனியே ரோஸ்டாடமியான் (30 புள்ளி) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.


Next Story