உலக துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம்


உலக துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம்
x
தினத்தந்தி 27 Feb 2019 11:15 PM GMT (Updated: 2019-02-28T02:04:29+05:30)

உலக துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிட்டியது.

புதுடெல்லி,

உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் கடந்த ஒரு வார காலமாக நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் இந்தியாவின் மானு பாகெர், சவுரப் சவுத்ரி ஜோடி 483.4 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கியது. சீனாவின் ரான்ஸின் ஜியாங்- போவென் ஜாங் ஜோடி வெள்ளிப்பதக்கமும் (477.7 புள்ளி), கொரியாவின் மின்ஜங் கிம்- பார்க் டாஹென் இணை வெண்கலப்பதக்கமும் (418.8 புள்ளி) பெற்றது. மற்றொரு இந்திய கூட்டணியான ஹீனா சித்து- அபிஷேக் வர்மா தகுதி சுற்றை தாண்டவில்லை.

16 வயதான சவுரப் சவுத்ரிக்கு இது 2-வது தங்கப்பதக்கம் ஆகும். ஏற்கனவே 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் பிரிவில் மகுடம் சூடியிருந்தார். அதே சமயம் இரண்டு தனிநபர் பிரிவுகளில் ஏமாற்றத்தை சந்தித்த மானுபாகெருக்கு இந்த பதக்கம் ஆறுதல் அளித்தது.

மொத்தத்தில் நடப்பு தொடரில் இந்தியா கைப்பற்றிய 3-வது தங்கப்பதக்கம் இதுவாகும். அபுர்வி சண்டிலா பெண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் தனிநபர் பிரிவில் தங்கம் வென்று இருந்தார்.

10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு பிரிவில் இந்திய ஜோடிகள் ஜொலிக்கவில்லை. இறுதிப்போட்டிக்கு 5 ஜோடி மட்டுமே தகுதி பெற முடியும் என்ற நிலையில் இந்தியாவின் அஞ்சும் மோட்ஜில்-ரவிகுமார் ஆகியோர் 7-வது இடமும், அபுர்வி சண்டிலா- தீபக்குமார் ஜோடியினர் 25-வது இடமும் பெற்று தகுதி சுற்றுடன் வெளியேற்றப்பட்டனர். இந்த பிரிவில் சீனாவின் ஜாவ் ரோஜூ- லு யுகுன் ஜோடி 503.6 புள்ளிகள் குவித்து புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வசப்படுத்தியது.

நேற்றுடன் நிறைவடைந்த இந்த தொடரில் பதக்கப்பட்டியலில் இந்தியா, ஹங்கேரி தலா 3 தங்கப்பதக்கத்துடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டது. சீனா ஒரு தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என்று 10 பதக்கத்துடன் 3-வது இடத்தை பெற்றது.

சவுரப் சவுத்ரிக்கு மானு புகழாரம்

விரைவில் பிளஸ்-2 தேர்வு எழுத இருக்கும் அரியானாவைச் சேர்ந்த இளம் மங்கையும், காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனுமான மானு பாகெர் கூறுகையில், ‘இந்த உலக கோப்பையில் இரண்டு தனிநபர் பிரிவுகளில் (10 மீட்டர் ஏர் பிஸ்டல், 25 மீட்டர் பிஸ்டல்) கடும் முயற்சியை வெளிப்படுத்திய போதிலும் சிறப்பாக செயல்பட முடியவில்லை. தற்போது ஒரு பதக்கம் வென்று இருப்பதன் மூலம் முழுமையாக நிம்மதி அடையவில்லை. ஆனால் திருப்தி அளிக்கிறது. துப்பாக்கி சுடுதலில் சவுரப் சவுத்ரியின் மனநிலை என்னை விட முற்றிலும் வித்தியாசமானது. ஒரு போதும் நம்பிக்கையை இழக்க மாட்டார். எப்போதும் சாதிக்க முடியும் என்ற நேர்மறை சிந்தனையுடன் இருப்பார். மற்றவர்களை போல் அதிகமாக பேசவும் மாட்டார்’ என்றார். சவுரப் சவுத்ரி கூறும் போது, ‘மானு பாகெர் சிறந்த துப்பாக்கி சுடுதல் வீராங்கனை. அவரிடம் இருந்த நான் நிறைய கற்று இருக்கிறேன்’ என்றார்.


Next Story