ஆசிய சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று இந்திய அணி சாதனை

தைபேயில் நடந்த 12வது ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மனு பேக்கர் மற்றும் சவுரப் சவுத்ரி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.
புதுடெல்லி,
தைபே நாட்டின் டாவோயுவான் நகரில் 12வது ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய துப்பாக்கி சுடுதல் நட்சத்திர வீரர்களான 17 வயது மனு பேக்கர் மற்றும் 16 வயது சவுரப் சவுத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் தகுதி சுற்றில் அவர்கள் இருவரும் இணைந்து 784 புள்ளிகள் எடுத்து உலக சாதனையை முறியடித்து உள்ளனர். கடந்த 5 நாட்களுக்கு முன்பு நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் ரஷ்ய நாட்டை சேர்ந்த விட்டலினா பத்சராஷ்கினா மற்றும் ஆர்ட்டெம் செர்னவ்சோவ் ஆகியோர் உலக சாதனை படைத்திருந்தனர். இதனை இந்திய இணை முறியடித்துள்ளது.
இதன்பின் இறுதி போட்டியில் 484.8 புள்ளிகள் எடுத்து இந்திய இணை தங்க பதக்கத்தினை வென்றது.
டெல்லியில் நடந்த சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்புக்கான உலக கோப்பை போட்டியில் தங்கம் வென்ற ஒரு மாதத்தில் அவர்கள் இந்த போட்டியில் தங்கம் வென்றுள்ளனர்.
கொரியாவின் வாங் சியோன்ஜியன் மற்றும் கிம் மோஸ் 481.1 புள்ளிகளுடன் வெள்ளி பதக்கமும், தைபேயின் வூ சியா யிங் மற்றும் கவ் குவான்-டிங் 413.3 புள்ளிகளுடன் வெண்கல பதக்கமும் வென்றனர்.
இறுதி போட்டியில், இந்தியாவின் அனுராதா மற்றும் அபிஷேக் வர்மா ஆகியோர் கொண்ட 2வது அணி 372.1 புள்ளிகளுடன் 4வது இடத்தினை பிடித்துள்ளது.
Related Tags :
Next Story