சவால்களை விரும்பும் சதுரங்க வீராங்கனை


சவால்களை விரும்பும் சதுரங்க வீராங்கனை
x
தினத்தந்தி 25 May 2019 11:25 AM GMT (Updated: 25 May 2019 11:25 AM GMT)

தற்போது பெண் சர்வதேச மாஸ்டராக உள்ள சதுரங்க வீராங்கனை வர்ஷினி, கிராண்ட்மாஸ்டர் ஆவதே தனது அடுத்த இலக்கு என்கிறார்.

‘‘மேலே மேலே செல்லச் செல்ல போட்டிகள் கடினமாகும். ஆனால் சவால்களை எதிர்கொண்டு வெல்வதே சந்தோஷம்’’ என வர்ஷினி சொல்கிறார். அவரது உற்சாக பேட்டி...

?நீங்கள் சென்னைவாசியா?

ஆம். நான் பிறந்து, வளர்ந்தது எல்லாம் சென்னை முகப்பேர் கிழக்கில்தான். தற்போது எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வடபழனி வளாகத்தில் கணினிப் பொறியியல் இரண்டாமாண்டு படிக்கிறேன். அப்பா வேலவன், முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் சதுரங்கப் பயிற்சியாளர் மற்றும் பொறுப்பாளராக உள்ளார். அம்மா மஞ்சுளா இல்லத்தரசி. தங்கை ரிந்தியா 10-ம் வகுப்பு படிக்கிறார். அவரும் ஒரு செஸ் வீராங்கனைதான்.

?நீங்கள் சதுரங்கத்தில் இறங்கியது எப்போது?

ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதுதான் எனக்கு சதுரங்கம் அறிமுகமானது. அப்போது, பள்ளியில் நடத்தப்பட்ட கோடை கால செஸ் பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன். அப்படியே எனக்கு இதில் ஆர்வம் பற்றிக்கொள்ள, தொடர்ந்தேன். போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்தேன். உள்ளூர் போட்டிகளில் தொடங்கிய நான், சர்வ தேசப் போட்டிகளுக்கு முன்னேறினேன்.

?நீங்கள் சர்வதேச அளவில் பெற்ற முதல் முக்கிய வெற்றி என்ன?

முதன்முதலில், 14 வயதுக்கு உட்பட்டோருக்கான காமன்வெல்த் செஸ் போட்டியில் தங்கம் வென்றேன். தொடர்ந்து, 16 வயதுக்கு உட்பட்டோருக்கான காமன்வெல்த் போட்டியிலும் தங்கம் பெற்றேன். அடுத்து இதே போட்டியில், 18 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் எனக்கு வெண்கலம் கிட்டியது.

?சர்வதேச அளவில் உங்களின் பிற சாதனைகள்?

கடந்த 2015-ம் ஆண்டு கிரீசில் நடைபெற்ற உலக இளையோர் சதுரங்க சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கத்தைச் சொந்தமாக்கினேன். தொடர்ந்து, பெண்களுக்கான உலக அமெச்சூர் செஸ் போட்டியிலும் வெள்ளி வசமானது. மங்கோலியாவில் நடந்த ஆசிய இளையோர் பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றிருக்கிறேன்.

?உங்களின் அடுத்த இலக்கு என்ன?

தற்போது பெண் சர்வதேச மாஸ்டராக (டபிள்யூ.ஐ.எம்.) உள்ள நான், 2187 ‘பிடே’ ரேட்டிங் புள்ளிகளுடன், கிராண்ட்மாஸ்டருக்கான இரண்டு தகுதிநிலைகளை (நார்ம்) பெற்றுள்ளேன். அடுத்து, பெண் கிராண்ட்மாஸ்டராவதுதான் எனது இலக்கு.

?அப்பா சதுரங்கப் பயிற்சியாளராக இருப்பதால்தான் நீங்கள் இந்த விளையாட்டுக்கு வந்தீர்களா?

அப்படிக் கூற முடியாது. அப்பாவுக்கு செஸ் ஆர்வம் உண்டு என்றாலும், நான் இதில் இறங்கியபோது அவர் தொழிலில் ஈடுபட்டிருந்தார். பின்னர்தான், சதுரங்கப் பயிற்சியே அவரது பணி ஆனது.

?உங்களைப் பார்த்துத்தான் உங்கள் தங்கை சதுரங்கத்துக்கு வந்தாரா?

ஆமாம். தற்போது அவரும் ஒரு சர்வதேச வீராங்கனையாக உயர்ந்திருக்கிறார். எங்கம்மாவும் கூட சதுரங்கம் அறிவார்.

?இப்படி சதுரங்கக் குடும்பமாக இருப்பது உதவியாக உள்ளதா?

ஆமாம். நாங்கள் வீட்டில் சதுரங்கம் பற்றி விவாதிக்க முடிகிறது, பயிற்சி செய்ய முடிகிறது.

?நீங்களும் உங்கள் தங்கையும் போட்டியில் ஒருவரை ஒருவர் எதிர்கொண்டிருக்கிறீர்களா? அப்போது விட்டுக்கொடுப்பது உண்டா?

நாங்கள் இருவரும் போட்டியில் மோதிக்கொண்டது உண்டு. ஆனால் சகோதரிகள் என்பதால் விட்டுக் கொடுப்பது எல்லாம் இல்லை. போட்டி என்று வந்துவிட்டால், எதிராளி எதிராளிதான்.

?தற்போது நீங்கள் தினமும் எவ்வளவு மணி நேரம் பயிற்சி செய்கிறீர்கள்?

நான் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளதால், தினமும் 2 மணி நேரம்தான் சதுரங்கப் பயிற்சியில் ஈடுபடுகிறேன். சென்னையைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டர் விஷ்ணு பிரசன்னாவிடம் நான் பயிற்சி பெறுகிறேன்.

?சென்னையில் இருந்து இளம் கிராண்ட்மாஸ்டர்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்களே?

அதற்கு இங்கு நிலவும் சிறந்த போட்டிச் சூழலும், தரமான பயிற்சியாளர்களும்தான் காரணம். அந்த வகையில், சென்னைப் பெண்ணான நானும் அதிர்ஷ்டசாலிதான்.

?உங்களுக்குப் பிடித்த சதுரங்க வீரர் யார்?

நமது விஸ்வநாதன் ஆனந்துதான் எனக்குப் பிடித்த செஸ் வீரர். அதேபோல நடப்பு உலக சாம்பியனான மாக்னஸ் கார்ல்சனையும் எனக்குப் பிடிக்கும்.

?அந்த சாம்பியன் வீரர்களைச் சந்திக்கும் வாய்ப்புப் பெற்றிருக்கிறீர்களா?

ஆனந்தையும் கார்ல்சனையும் நான் சந்தித்திருக்கிறேன். ஆனந்துடன் உரையாடி, அவரது வாழ்த்துகளையும் பெற்றிருக்கிறேன்.

?எதனால் சதுரங்கம் உங்களை ஈர்க்கிறது?

சதுரங்கம் என்பதே, சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதுதான். வாழ்க்கையிலும் இந்தத் திறன் அவசியமாக இருப்பதால், செஸ் என் மனம் கவர்ந்த விளையாட்டாக உள்ளது.

?உங்களின் ஆட்ட பாணி எத்தகையது?

அதிரடியாக ஆடுவதுதான் எனது ஆட்ட பாணியாகும். வியூகரீதியாக ஆடி எதிராளியை வீழ்த்த முயல்வேன்.

?உங்களின் பலவீனமாக எதைக் கருதுகிறீர்கள்?

நான் முன்பெல்லாம், போட்டி களின்போது நிறைய டென்ஷன் ஆவேன். அதனாலேயே பலமுறை வெற்றியைப் பறி கொடுத்திருக்கிறேன். தற்போது டென்ஷனை குறைக்கும் வகையில் தியானத்தில் ஈடுபடுகிறேன். அதன் நல்ல பலனை அனுபவப்பூர்வமாக உணர் கிறேன்.

?சதுரங்கம் தவிர உங்களுக்கு வேறு எதில் ஆர்வம்?

ஆரம்பத்தில் நான் தடகள வீராங்கனையாகவும் இருந்தேன். ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்று வந்தேன். ஆனால் ஒரே நேரத்தில் இரு குதிரைகளில் சவாரி செய்வது சரி வராது என்று பலரும் ஆலோசனை கூறியதால், நான் தடகளத்தைத் துறந்து சதுரங்கத்தில் மட்டும் ஈடுபடத் தொடங்கினேன்.

?நீங்கள் எப்படி ‘ரிலாக்ஸ்’ செய்துகொள்கிறீர்கள்?

இசை கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ், ஆங்கிலப் பாடல்களை விரும்பிக் கேட்பேன்.

?அடுத்து நீங்கள் எதிர்நோக்கியுள்ள முக்கியமான போட்டிகள்?

கோவா, புவனேஸ்வர், மும்பையில் நடைபெறவிருக்கும் சதுரங்கப் போட்டிகளை நான் ஆவலோடு எதிர்நோக்கி இருக்கிறேன்.

?சர்வதேச அளவில் போட்டி மிகவும் கடினமாக இருக்கும் அல்லவா?

ஆமாம். நாம் உயர உயர, கடினமான சவால்களை எதிர்கொண்டுதானே ஆக வேண்டும்? அவற்றில் வெல்வதுதானே இனிமை? அதற்கு, கடும் உழைப்பு தவிர வேறு குறுக்குவழியே கிடையாது.

?உங்கள் பல்கலைக்கழகத்தில் உங்களுக்கு எந்த அளவு ஆதரவாக உள்ளனர்?

நான் முன்பு படித்த பள்ளியிலும் சரி, தற்போது பயிலும் பல்கலையிலும் சரி, எனக்கு மிகவும் ஆதரவாக உள்ளனர். அதனால்தான் படிப்புடன் நான் செஸ் பயணத்தைத் தொடர முடிகிறது.

?வீட்டில்...?

நான் முன்பே கூறியபடி, வீட்டில் அனைவரும் இவ்விளையாட்டை அறிந்தவர்கள், இதில் ஆர்வம் உள்ளவர்கள் என்பதால், எனக்கு மிகவும் வசதியாக உள்ளது. அதே நேரம் நாங்கள் நடுத்தரக் குடும்பத்தினர். போட்டிகளில் பங்கேற்கும் செலவைச் சமாளிக்க மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கிறது. அதிலும் வெளிநாட்டில் நடைபெறும் போட்டி என்றால், பல லட்சம் செலவு பிடிக்கும். எனவே, யாராவது ஸ்பான்சர்ஷிப் செய்தால் என்னால் பணக் கவலையின்றி சதுரங்கத்தில் மனதைச் செலுத்த முடியும்.


Next Story