புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றி


புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றி
x
தினத்தந்தி 21 July 2019 11:56 PM GMT (Updated: 21 July 2019 11:56 PM GMT)

புரோ கபடி போட்டியில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி வெற்றியுடன் தொடங்கியது.

ஐதராபாத்,

7-வது புரோ கபடி லீக் தொடர் ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் அரைஇறுதிக்குரிய 4 அணிகள் முடிவாகும். இந்த நிலையில் நேற்றிரவு நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, உள்ளூர் அணியான தெலுங்கு டைட்டன்சை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே அபாரமாக ஆடிய தமிழ் தலைவாஸ் அணி வேகமாக புள்ளிகளை திரட்டியது. அணிக்கு புதுவருகையான ராகுல் சவுத்ரி, ரைடு மூலம் எதிராளியை மிரட்டினார். தெலுங்கு அணியை ஆல்-அவுட் செய்த தமிழ் தலைவாஸ் முதல் பாதியில் 20-10 என்ற புள்ளி கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.

பிற்பாதியிலும் தமிழ் தலைவாஸ் வீரர்களின் மிடுக்கான ஆட்டம் தொடர்ந்தது. மறுபடியும் தெலுங்கு அணியை ஆல்-அவுட் ஆக்கிய தமிழ் தலைவாஸ் வீரர்கள் 39-26 என்ற புள்ளி கணக்கில் வெற்றிக்கனியை பறித்தனர். இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கிய தமிழ் தலைவாஸ் அணியில் ராகுல் சவுத்ரி 12 புள்ளிகளும், மன்ஜீத் சில்லார் 6 புள்ளிகளும், கேப்டன் அஜய் தாகூர் 4 புள்ளிகளும் எடுத்தனர். தெலுங்கு டைட்டன்சுக்கு இது 2-வது தோல்வியாகும்.

முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 42-24 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்சை வீழ்த்தியது.

இன்றைய ஆட்டங்களில் யு மும்பா- ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் (இரவு 7.30 மணி), புனேரி பால்டன்- அரியானா ஸ்டீலர்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story