கேல்ரத்னா விருது பெறுகிறார், பஜ்ரங் பூனியா


கேல்ரத்னா விருது பெறுகிறார், பஜ்ரங் பூனியா
x
தினத்தந்தி 17 Aug 2019 12:08 AM GMT (Updated: 17 Aug 2019 12:08 AM GMT)

இந்த ஆண்டுக்கான கேல்ரத்னா விருதை மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா பெறுகிறார்.

புதுடெல்லி,

விளையாட்டுத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல்ரத்னா, அர்ஜூனா மற்றும் துரோணாச்சார்யா விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி முகுந்தகம் ஷர்மா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு கமிட்டியில் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், முன்னாள் கால்பந்து வீரர் பாய்சுங் பூட்டியா உள்பட 12 பேர் இடம் பெற்றுள்ளனர்.

கமிட்டியின் 2 நாள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் கேல்ரத்னா விருதுக்கு ‘நம்பர் ஒன்’ மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியாவின் பெயரை பரிந்துரை செய்வது என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. அவருடன் சேர்த்து மேலும் ஒரு பெயரும் கேல்ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட வாய்ப்புள்ளது. அத்துடன் அர்ஜூனா மற்றும் துரோணாச்சார்யா விருதுக்குரியவர்களையும் இன்றுக்குள் இறுதி செய்து, விளையாட்டு அமைச்சகத்துக்கு அனுப்ப முடிவு செய்து இருக்கிறார்கள்.

கேல்ரத்னா விருது 25 வயதான பஜ்ரங் பூனியாவுக்கு கிடைப்பது உறுதியாகி விட்ட நிலையில் அவர் கூறுகையில், ‘கடினமாக பயிற்சி எடுத்து, போட்டியில் கடுமையாக மல்லுகட்டுவதே எனது பணி. விளையாட்டில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதில் தான் எனது கவனம் இருக்கிறதே தவிர, விருது மீது அல்ல. சர்வதேச அளவில் வெற்றிகளை குவித்தால், அதற்குரிய அங்கீகாரம் தானாக கிடைக்கும். நான் நிறைய சாதித்து இருக்கிறேன். அதனால் இந்த விருதுக்கு நான் தகுதியானவன். உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயாராகி வரும் நிலையில் இந்த நல்ல தகவல் வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.’ என்றார். கேல்ரத்னா விருதுடன் பாராட்டு பட்டயமும், ரூ.7½ லட்சம் ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.

பஜ்ரங் பூனியா கடந்த ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியிலும், காமன்வெல்த் விளையாட்டு போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். ஆனால் கடந்த ஆண்டு அவரது பெயர் இந்த விருதுக்கு பரிசீலிக்கப்படாததால் கோர்ட்டில் முறையிடுவேன் என்று மிரட்டியது குறிப்பிடத்தக்கது.


Next Story