புரோ கபடி லீக் தொடர்: சென்னையில் இன்று தொடக்கம்


புரோ கபடி லீக் தொடர்: சென்னையில் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 17 Aug 2019 12:20 AM GMT (Updated: 2019-08-17T05:50:58+05:30)

புரோ கபடி லீக் தொடரின் சென்னை சுற்று ஆட்டம் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்குகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னை,

12 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் (ஜூலை) 20-ந் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று (132 ஆட்டங்கள்) முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்கு தகுதி பெறும். 3 முதல் 6 வரையிலான இடங்களை பெறும் அணிகள் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் மோத வேண்டும். அதில் வெற்றி பெறும் 2 அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.

மொத்தம் 12 இடங்களில் அரங்கேறும் இந்த போட்டியில் ஐதராபாத், மும்பை, பாட்னா ஆகிய இடங்களில் போட்டிகள் நடந்து முடிந்து விட்டன. ஆமதாபாத்தில் நேற்றுடன் போட்டி முடிந்தது. 
புரோ கபடி லீக் தொடரின் சென்னை சுற்று ஆட்டம் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி, ரோகித் குமார் தலைமையிலான நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்சை (இரவு 7.30 மணி) எதிர்கொள்கிறது. தமிழ் தலைவாஸ் அணி 6 ஆட்டத்தில் ஆடி 3 வெற்றி, 2 தோல்வியும், ஒரு டையும் கண்டுள்ளது. பெங்களூரு புல்ஸ் 7 ஆட்டத்தில் விளையாடி 4-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் சந்தித்துள்ளது.

மற்றொரு ஆட்டத்தில் மனிந்தர்சிங் தலைமையிலான பெங்கால் வாரியர்ஸ், ஜோகிந்தர்சிங் தலைமையிலான தபாங் டெல்லியை (இரவு 8.30 மணி) சந்திக்கிறது. பெங்கால் வாரியர்ஸ் அணி 7 ஆட்டத்தில் ஆடி 4 வெற்றி, 2 தோல்வி, ஒரு டை கண்டு இருக்கிறது. தபாங் டெல்லி அணி 6 ஆட்டத்தில் ஆடி 5 வெற்றி, ஒரு தோல்வி யுடன் புள்ளி பட்டியலில் 2-வது இடம் வகிக்கிறது.

சென்னையில் வருகிற 23-ந் தேதி வரை போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டிக்கெட் விலை ரூ.150, ரூ.300, ரூ.1,250, ரூ.2,000 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ins-i-d-er என்ற இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டி தொடர் குறித்து தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர் பாஸ்கரன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ‘நாங்கள் தோல்வி அடைந்த 2 ஆட்டங்களிலும் மிகவும் நெருக்கமாக சவால் அளித்து தான் வெற்றி வாய்ப்பை தவற விட்டோம். இந்த சீசனில் எல்லா அணிகளும் சமபலத்துடன் விளங்குகின்றன. எனவே எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு என்று சொல்ல முடியாது. வரும் ஆட்டங்களில் உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். எதிரணியின் பலம், பலவீனத்துக்கு தகுந்தபடி தான் வீரர்களை தேர்வு செய்கிறோம். தமிழ் தலைவாஸ் அணிக்கு ரசிகர்கள் ஆமோக ஆதரவு அளித்து வருகிறார்கள். நமது அணியில் எல்லா வீரர்களும் நல்ல உடல் தகுதியுடன் உள்ளனர். சென்னையில் நடைபெறும் போட்டிகளில் நமது அணி அதிக வெற்றிகளை குவிக்கும் என்று நம்புகிறேன். புரோ கபடி போட்டி மூலம் புதிய வீரர்கள் நிறைய பேர் உருவாகி வருகிறார்கள். இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டால் இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பு கிடைக்கும்’ என்று தெரிவித்தார்.Next Story