புரோ கபடி லீக்: பெங்களூரு அணியிடம் தமிழ் தலைவாஸ் மோசமான தோல்வி


புரோ கபடி லீக்: பெங்களூரு அணியிடம் தமிழ் தலைவாஸ் மோசமான தோல்வி
x
தினத்தந்தி 17 Aug 2019 11:49 PM GMT (Updated: 2019-08-18T05:19:47+05:30)

புரோ கபடி லீக் ஆட்டத்தில், பெங்களூரு அணியிடம் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியடைந்தது.

சென்னை,

புரோ கபடி லீக் தொடரில் சென்னையில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் தமிழ் தலைவாஸ் அணி 21-32 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியிடம் மோசமான தோல்வியை தழுவியது.

12 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது புரோ கபடி லீக் தொடரில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று இரவு நடந்த 45-வது லீக் ஆட்டத்தில் அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி, ரோகித் குமார் தலைமையிலான நடப்பு சாம்பியன் பெங்களூரு புல்சை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே பெங்களூரு புல்ஸ் ஆதிக்கம் செலுத்தியது. 8-வது நிமிடத்தில் பெங்களூரு புல்ஸ் அணி, தமிழ் தலைவாசை ‘ஆல்-அவுட்’ செய்து அதிர்ச்சி அளித்தது. முதல் பாதியில் பெங்களூரு புல்ஸ் அணி 17-10 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தது.

பிற்பாதியில் தமிழ் தலைவாஸ் அணி ஒரு கட்டத்தில் 17-21 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சை நெருங்கியது. அப்போது பெங்களூரு அணியில் 2 வீரர்கள் மட்டுமே களத்தில் எஞ்சி இருந்தனர். அந்த நேரத்தில் ரைடு சென்ற கேப்டன் அஜய் தாகூர் தேவையில்லாமல் சிக்கினார். அதனால் தமிழ் தலைவாசின் ‘ஆல்-அவுட்’ வாய்ப்பு கைநழுவியதுடன் எதிரணிக்கு 2 புள்ளிகளும் போனது. அதுவே ஆட்டத்தில் திருப்புமுனையாக மாறியது.

அதன் பிறகு மீண்டும் பெங்களூரு அணியின் கை ஓங்கியது. 2 நிமிடம் மிச்சம் இருந்த போது, பெங்களூரு புல்ஸ் அணி தமிழ் தலைவாசை மறுபடியும் ‘ஆல்-அவுட்’ செய்து அசத்தியது. முடிவில் பெங்களூரு புல்ஸ் 32-21 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாசை வீழ்த்தியது. பெங்களூரு நட்சத்திர வீரர் பவன் செராவத் 11 புள்ளிகள் சேர்த்தார்.

இந்த ஆண்டில் உள்ளூர் சுற்று போட்டியை தமிழ் தலைவாஸ் அணி மோசமான தோல்வியுடன் தொடங்கி இருப்பது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. 7-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாஸ் அணி சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். 3 வெற்றி, ஒரு டையும் கண்டு இருக்கிறது. 8-வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூரு புல்சுக்கு இது 5-வது வெற்றியாகும். 3 ஆட்டத்தில் தோற்றும் இருக்கிறது.

பெங்கால் வாரியர்ஸ்-தபாங் டெல்லி அணிகள் இடையிலான மற்றொரு திரிலிங்கான ஆட்டம் 30-30 என்ற புள்ளி கணக்கில் சமனில் (டை) முடிந்தது.

இன்றைய ஆட்டங்கள்

இதே மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் ஆட்டங்களில் அரியானா ஸ்டீலர்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 7.30 மணி), தமிழ் தலைவாஸ்-புனேரி பால்டன் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story