புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணி மீண்டும் தோல்வி


புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணி மீண்டும் தோல்வி
x
தினத்தந்தி 23 Aug 2019 10:30 PM GMT (Updated: 23 Aug 2019 8:37 PM GMT)

புரோ கபடி லீக் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 24-29 என்ற புள்ளி கணக்கில் மும்பை அணியிடம் தோல்வி அடைந்தது.

சென்னை, 

புரோ கபடி லீக் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 24-29 என்ற புள்ளி கணக்கில் மும்பை அணியிடம் தோல்வி அடைந்தது.

புரோ கபடி

12 அணிகள் பங்கேற்றுள்ள புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று இரவு அரங்கேறிய 55-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்-யூ மும்பா (மும்பை) அணிகள் சந்தித்தன.

முதலில் தமிழ் தலைவாஸ் அணி 2 புள்ளிகள் முன்னிலை வகித்தாலும் தொடக்க சரிவை சமாளித்த முன்னாள் சாம்பியனான மும்பை அணி 5-5 என்ற புள்ளி கணக்கில் சமநிலையை எட்டியது. ஒரு கட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி 6 புள்ளிகள் வரை முன்னிலை கண்டது. அப்போது ரைடு சென்ற ராகுல் சவுத்ரி எதிரணியின் 2 வீரர்களிடம் சூப்பர் டேக்கிளில் சிக்கியதால் தமிழ் தலைவாஸ் அணி 2 புள்ளியை தாரை வார்த்ததுடன் அருமையான ‘ஆல்-அவுட்’ வாய்ப்பையும் கோட்டை விட்டது. முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் அணி 12-10 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை வகித்தது.

தமிழ் தலைவாஸ் தோல்வி

பிற்பாதியின் தொடக்கத்தில் அபாரமாக செயல்பட்ட மும்பை அணி சமநிலையை (15-15) எட்டியதுடன் தமிழ் தலைவாஸ் அணியை ‘ஆல்-அவுட்’ செய்து முன்னிலையும் பெற்றது. இந்த முன்னிலையை மும்பை அணி கடைசி வரை தக்கவைத்துக் கொண்டது. முடிவில் மும்பை அணி 29-24 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தியது. இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணி உள்ளூரில் 4 ஆட்டங்களில் விளையாடி ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. 10-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி பெற்ற 5-வது வெற்றி இதுவாகும். 5 ஆட்டங்களில் தோல்வி கண்டுள்ளது. 10-வது ஆட்டத்தில் ஆடிய தமிழ் தலைவாஸ் அணி சந்தித்த 5-வது தோல்வி இது. 3 ஆட்டத்தில் வெற்றியும், 2 ஆட்டத்தில் டையும் கண்டுள்ளது.

முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் 29-26 என்ற புள்ளி கணக்கில் மூன்று முறை சாம்பியனான பாட்னா பைரட்சை சாய்த்து 4-வது வெற்றியை பெற்றது. அதே சமயம் 10-வது ஆட்டத்தில் ஆடிய பாட்னா பைரட்ஸ் அணிக்கு இது 7-வது தோல்வியாகும்.

இன்றைய ஆட்டங்கள்

டெல்லியில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் தபாங் டெல்லி- பெங்களூரு புல்ஸ் (இரவு 7.30 மணி), ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 8.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story