மாநில தடகளம்: திருவண்ணாமலை பள்ளி ‘சாம்பியன்’


மாநில தடகளம்: திருவண்ணாமலை பள்ளி ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 21 Jan 2020 11:46 PM GMT (Updated: 21 Jan 2020 11:46 PM GMT)

மாநில தடகள போட்டியில், திருவண்ணாமலை பள்ளி ‘சாம்பியன்’ பட்டம் வென்றது.

சென்னை,

எம்.ஓ.பி.வைஷ்ணவா மகளிர் கல்லூரி சார்பில் பள்ளி மாணவிகளுக்கான 2-வது மாநில தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் 2 நாட்கள் நடந்தது. சீனியர் (9 மற்றும் 10-ம் வகுப்பு), சூப்பர் சீனியர் (பிளஸ் 1, பிளஸ் 2) ஆகிய பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. இதில் கடைசி நாளான நேற்று நடந்த சீனியர் பிரிவு 400 மீட்டர் ஓட்டத்தில் ஆர்.தீப்தியும் (சி.எஸ்.ஐ. பெய்ன்ஸ் பள்ளி, சென்னை), 100 மீட்டர் ஓட்டத்தில் ருதிகாவும் (குட்ஷெப்பர்டு பள்ளி, சென்னை) முதலிடம் பிடித்தனர். 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஹோலி ஏஞ்சல்ஸ் (சேலம்) அணியும், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஸ்ரீ வி.டி.எஸ். ஜெயின் (திருவண்ணாமலை) அணியும் முதலிடத்தை பிடித்தன. சூப்பர் சீனியர் பிரிவில் 400 மீட்டர் ஓட்டத்தில் கே.தீப்தியும் (துர்காதேவி சவுத்ரி விவேகானந்தா வித்யாலயா), 100 மீட்டர் ஓட்டத்தில் சத்யா ஸ்ரீயும் (ஸ்ரீ வி.டி.எஸ். ஜெயின் பள்ளி) தங்கப்பதக்கம் வென்றனர். 100 மீட்டர் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் ஸ்ரீ வி.டி.எஸ். ஜெயின் அணிகள் தங்கப்பதக்கத்தை தனதாக்கின. இந்த போட்டியில் அதிக பதக்கம் வென்ற ஸ்ரீ வி.டி.எஸ். ஜெயின் பள்ளி (திருவண்ணாமலை) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிகுலேசன் (சென்னை) 2-வது இடம் பெற்றது. சீனியர் பிரிவில் ருதிகாவும் (குட்ஷெப்பர்டு பள்ளி), சூப்பர் சீனியர் பிரிவில் ரம்யாயும் (ஸ்ரீ வி.டி.எஸ். ஜெயின்) சிறந்த வீராங்கனைகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் மணிவண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பையை வழங்கினார். தெற்கு ரெயில்வே விளையாட்டு அதிகாரி கே.சாரம்மா, சென்னை பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் வி.மகாதேவன், எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன், துணை முதல்வர் உதிரா உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.


Next Story