சென்னையில் நடந்த ஆசிய டிரையத்லான் போட்டியில் செர்பியா வீரர் முதலிடம்


சென்னையில் நடந்த ஆசிய டிரையத்லான் போட்டியில் செர்பியா வீரர் முதலிடம்
x
தினத்தந்தி 23 Feb 2020 11:20 PM GMT (Updated: 23 Feb 2020 11:20 PM GMT)

சென்னையில் நடந்த ஆசிய டிரையத்லான் போட்டியில் செர்பியா வீரர் முதலிடம் பிடித்தார்.

சென்னை,

தமிழ்நாடு டிரையத்லான் சங்கம் சார்பில், இந்திய டிரையத்லான் சம்மேளனம் ஆதரவுடன் ஆசிய கோப்பை டிரையத்லான் பந்தயம் சென்னையில் நேற்று காலை நடந்தது. இந்தியா பிரான்ஸ், செர்பியா, ஹாங்காங், ஜப்பான், கஜகஸ்தான், சிலி, சுவிட்சர்லாந்து, போலந்து, ருமேனியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 70 வீரர்கள், 30 வீராங்கனைகள் பங்கேற்றனர். டிரையத்லான் பந்தயத்தில் நீச்சல், சைக்கிளிங், ஓட்டம் ஆகிய 3 பிரிவுகளில் தங்களது திறமையை காட்ட வேண்டும். அதாவது முதலில் 1½ கிலோ மீட்டர் தூரம் நீந்த வேண்டும். அடுத்து 40 கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிளில் கடக்க வேண்டும். இதைத்தொடர்ந்து 10 கிலோ மீட்டர் தூரம் ஓட வேண்டும்.

இதையொட்டி சென்னை நேப்பியர் பாலம் அருகே ஐ.என்.எஸ்.அடையார் கடற்படை தளம் அருகில் உள்ள கடல் பகுதியில் நீச்சல் போட்டி நடக்க இருந்தது. ஆனால் நேற்றைய தினம் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டதால் போட்டிக்கு உகந்த சூழல் இல்லை என்று கூறி போட்டி அமைப்பாளர்கள் நீச்சல் பந்தயத்தை மட்டும் கைவிட்டனர். இதற்கு பதிலாக கூடுதலாக 5 கிலோ மீட்டர் தூரம் ஓட்டப்பந்தயம் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

சைக்கிளிங் மற்றும் ஓட்டப்பந்தயத்தின் முடிவில் ஆண்கள் பிரிவில் செர்பியா வீரர் ஸ்டாஜானோவிச் 1 மணி 48 நிமிடம் 47 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்தார். ஹாங்காங் வீரர் ஆஸ்கார் காக்கின்ஸ் 2-வது இடத்தை (1 மணி 49 நிமிடம் 03 வினாடி) பெற்றார். இதன் பெண்கள் பிரிவில் சிலி வீராங்கனை பார்பரா ரிவோர்ஸ் 2 மணி ஒரு நிமிடம் 7 வினாடிகளில் முதலாவதாக பந்து கோப்பையை தட்டிச்சென்றார். தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய ருமேனியா வீராங்கனை அன்டோனிலா மனாக் (2 மணி 1 நிமிடம் 25 வினாடி) கடைசி நேரத்தில் பின்தங்கியதால் கோப்பையை நழுவ விட்டார்.

இதில் சிறப்பாக செயல்பட்ட இந்தியர்களின் அடிப்படையில் தேசிய டிரையத்லான் சாம்பியன்ஷிப் கணக்கிடப்பட்டது. இதன்படி ஆண்கள் பிரிவில் ஆதர்ஷ் முரளிதரன் நாயர் (சர்வீசஸ்) 1 மணி 58 நிமிடம் 01 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார். பெண்கள் பிரிவில் சரோஜினி தேவி (மணிப்பூர்) 2 மணி 21 நிமிடம் 20 வினாடிகளில் இலக்கை எட்டி கோப்பையை கைப்பற்றினார். தேசிய சாம்பியன்ஷில் முதலிடம் பிடித்த இவர்கள் ஆசிய அளவில் 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டனர்.


Next Story