மாநில கல்லூரி கைப்பந்து: பனிமலர் அணி ‘சாம்பியன்’


மாநில கல்லூரி கைப்பந்து: பனிமலர் அணி ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 17 March 2020 11:56 PM GMT (Updated: 17 March 2020 11:56 PM GMT)

மாநில கல்லூரி கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் ஆண்கள் பிரிவில் சென்னையை சேர்ந்த பனிமலர் என்ஜினீயரிங் கல்லூரி அணி ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றியது.

சென்னை,

சிவகங்கை மாவட்ட கைப்பந்து சங்கம் மற்றும் சேது பாஸ்கரா கல்வி குழுமம் சார்பில் தமிழ்நாடு கைப்பந்து சங்கம் அனுமதியுடன் கல்லூரி அணிகளுக்கான 3-வது மாநில கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சிவகங்கை மாவட்டம் கண்ட்ரமாணிக்கத்தில் உள்ள சேதுபாஸ்கரா ஐ.டி.ஐ. வளாகத்தில் கடந்த 4 நாட்கள் நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் 21 அணிகளும், பெண்கள் பிரிவில் 16 அணிகளும் பங்கேற்றன.

நேற்று இரவு நடந்த ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் பனிமலர் என்ஜினீயரிங் (சென்னை)-ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா (பொள்ளாச்சி) கல்லூரி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் பனிமலர் அணி 19-25, 25-23, 25-22, 25-16 என்ற செட் கணக்கில் சரஸ்வதி தியாகராஜா கல்லூரியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.

முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி (சென்னை) அணி, ஜமால் முகமது கல்லூரியை (திருச்சி) எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் செயின்ட் ஜோசப்ஸ் அணி 20-25, 25-23, 28-26 என்ற செட் கணக்கில் ஜமால் முகமது அணியை சாய்த்து 3-வது இடத்தை சொந்தமாக்கியது.

பெண்கள் பிரிவில் நடந்த இறுதிப்போட்டியில் பி.கே.ஆர். (கோபிசெட்டி பாளையம்) - இந்துஸ்தான் (சென்னை) கல்லூரி அணிகள் மோதின. 5 செட்கள் வரை பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் பி.கே.ஆர்.அணி 25-15, 23-25, 24-26, 25-21, 15-11 என்ற செட் கணக்கில் இந்துஸ்தான் அணியை போராடி வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

முன்னதாக நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம். (சென்னை) அணி 25-17, 25-11 என்ற நேர்செட்டில் எம்.ஓ.பி. வைஷ்ணவா (சென்னை) அணியை நேர்செட்டில் தோற்கடித்தது.


Next Story