ஏப்ரல் 15-ந் தேதி வரை எந்த போட்டியும் நடத்தக்கூடாது மத்திய விளையாட்டு அமைச்சகம் உத்தரவு


ஏப்ரல் 15-ந் தேதி வரை எந்த போட்டியும் நடத்தக்கூடாது   மத்திய விளையாட்டு அமைச்சகம் உத்தரவு
x
தினத்தந்தி 19 March 2020 11:06 PM GMT (Updated: 19 March 2020 11:06 PM GMT)

எந்தவித விளையாட்டு நிகழ்ச்சிகளையும் ஏப்ரல் 15-ந் தேதி வரை நடத்தக்கூடாது என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி, 

கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் நேற்று இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் அனைத்து தேசிய விளையாட்டு சம்மேளனங்களுக்கு அனுப்பப்பட்டு இருக்கும் சுற்றறிக்கையில், ‘அனைத்து தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் மற்றும் அதன் அங்கீகாரம் பெற்ற அமைப்புகள் போட்டிகள் மற்றும் தகுதி சுற்று போட்டிகள் உள்பட எந்தவித விளையாட்டு நிகழ்ச்சிகளையும் ஏப்ரல் 15-ந் தேதி வரை நடத்தக்கூடாது. ஒலிம்பிக் போட்டிக்காக தனியாக பயிற்சி பெற்று வரும் வீரர்களின் பயிற்சி முகாமுக்கு, சம்பந்தமில்லாத பயிற்சியாளர்கள், வீரர்கள் உள்பட யாரையும் அனுமதிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். பயிற்சி முகாமில் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் புதிய உத்தரவை தொடர்ந்து பாட்டியாலாவில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்க இருந்த முதலாவது இந்தியன் கிராண்ட்பிரி தடகள போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

Next Story