ரசிகர்கள் இன்றி நடந்த நிகழ்ச்சியில் ஒலிம்பிக் தீபம் ஜப்பானிடம் ஒப்படைப்பு


ரசிகர்கள் இன்றி நடந்த நிகழ்ச்சியில்   ஒலிம்பிக் தீபம் ஜப்பானிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 19 March 2020 11:17 PM GMT (Updated: 19 March 2020 11:17 PM GMT)

ஒலிம்பிக் தீபத்தை முறைப்படி ஜப்பானிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஏதென்ஸ் நகரில் உள்ள பழமைவாய்ந்த பான்ஏதெனிக் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.

ஏதென்ஸ்,

ஒலிம்பிக் போட்டி ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் ஜப்பானின் டோக்கியோ நகரில் நடக்கிறது. இதையொட்டி ஒலிம்பிக் தீபம் கடந்த மாதம் 12-ந்தேதி ஒலிம்பிக் பிறந்த இடமான கிரீஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் ஏற்றப்பட்டது. ஆனால் கொரோனா பீதியால் ஒரு வாரம் தொடர் ஓட்டமாக எடுத்து செல்லப்படும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் ஒலிம்பிக் தீபத்தை முறைப்படி ஜப்பானிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஏதென்ஸ் நகரில் உள்ள பழமைவாய்ந்த பான்ஏதெனிக் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. வழக்கமாக இந்த நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெறும். ஏராளமான ரசிகர்கள் திரளுவார்கள். கொரோனா அச்சத்தால் இந்த முறை பூட்டிய மைதானத்தில் இதை நடத்த வேண்டிய அவல நிலை ஏற்பட்டு விட்டது. 50 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்ட மைதானத்திற்குள் ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

முதலில் ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியனான கிரீஸ் வீரர் லெப்டெரிஸ் பெட்ரோனியாஸ் தீபத்தை தொடர் ஓட்டமாக எடுத்துச் சென்றார். பிறகு அவரிடம் இருந்து தீபத்தை பெற்று போல்வால்ட் சாம்பியன் கிரீஸ் வீராங்கனை கேத்ரினா ஸ்டெபானிதி மைதானத்தில் சிறிது தூரம் ஓடி, அங்கு வைக்கப்பட்டிருந்த மெகா கொப்பரையில் ஜோதியை ஏற்றி வைத்தார்.

இறுதியில் கிரீஸ் ஒலிம்பிக் கமிட்டி தலைவர் ஸ்பைரோஸ் கேப்ராலோஸ், ஒலிம்பிக் தீபத்தை ஜப்பான் முன்னாள் நீச்சல் வீராங்கனை இமோட்டா நாகோவிடம் ஒப்படைத்தார். இவர், 1996-ம் ஆண்டு நடந்த அட்லாண்டா ஒலிம்பிக்கில் பங்கேற்றவர். ‘யுனிசெப்’ பிரதிநிதியான இமோட்டா கிரீசில் வசிக்கிறார். கொரோனா பயத்தால் ஜப்பான் ஒலிம்பிக் குழுவினர் யாரும் கிரீசுக்கு செல்லாத நிலையில் கடைசி நேரத்தில் தீபத்தை பெற்றுக்கொள்ளும் பொறுப்பு இமோட்டாவிடம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் தீபத்துடன் புறப்பட்ட சிறப்பு விமானம் இன்று ஜப்பானை சென்றடைகிறது. அதன் பிறகு 26-ந்தேதி முதல் தீபம் ஜப்பான் முழுவதும் தொடர் ஓட்டமாக எடுத்து செல்லப்படும்.

Next Story