ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகளுக்கு ஆன்-லைன் மூலம் பயிற்சி


ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகளுக்கு ஆன்-லைன் மூலம் பயிற்சி
x
தினத்தந்தி 30 March 2020 12:39 AM GMT (Updated: 30 March 2020 12:39 AM GMT)

ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகளுக்கு ஆன்-லைன் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

புதுடெல்லி, 

அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான குத்துச்சண்டை பந்தயத்துக்கு இந்தியாவில் இருந்து இதுவரை மேரி கோம், சிம்ரன்ஜித் கவுர், லவ்லினா, பூஜா ராணி, அமித் பன்ஹால், மனிஷ் கவுசிக், விகாஸ் கிருஷ்ணன், ஆஷிஷ் குமார், சதீஷ்குமார் ஆகிய 9 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் இந்திய குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெற முடியாமல் வீட்டில் தவித்து வருகிறார்கள். தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடாமல் போனால் வீரர்களின் உடல் எடை அதிகரித்து சிரமத்தை சந்திக்கக்கூடும் என்பதால் அவர்களுக்கு ஆன்-லைன் மூலம் பயிற்சி அளிக்க இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் முடிவு செய்துள்ளது. இந்த ஆன்-லைன் பயிற்சி வகுப்பு இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது. சகஜநிலை திரும்பும் வரை இந்த பயிற்சி வகுப்பு தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய குத்துச்சண்டை உயர் திறன் இயக்குனர்கள் சான்டியாகோ நிவா, ரபெல் பெர்காம்ஸ்கோ ஆகியோர் முறையே ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினருக்கு ஆன்-லைனில் பயிற்சி அளிக்கின்றனர். இந்த புதிய பயிற்சி திட்டம் குறித்து டெலிகான்பரன்ஸ் மூலம் வீரர்-வீராங்கனைளுடன் கலந்து ஆலோசித்த இந்திய குத்துச்சண்டை சம்மேளன தலைவர் அஜய் சிங், அவர்களுடன் உரையாடுகையில், ‘இது எல்லாருக்கும் சவாலான நேரமாகும். தங்களை தாங்களே கவனித்து கொள்ள இது சரியான தருணமாகும். பயிற்சியாளர்களின் அறிவுரையின்படி செயல்பட்டு உடல் தகுதியை நிலையாக வையுங்கள். முடிந்த அளவுக்கு உங்களது உடல் எடையை சீராக வைத்து கொள்ளுங்கள்’ என்றார்.

Next Story