டோக்கியோ ஒலிம்பிக் தள்ளிவைக்கப்பட்டதால் பல கோடி ரூபாய் கூடுதல் செலவு - ஐ.ஓ.சி. தலைவர் தகவல்


டோக்கியோ ஒலிம்பிக் தள்ளிவைக்கப்பட்டதால் பல கோடி ரூபாய் கூடுதல் செலவு - ஐ.ஓ.சி. தலைவர் தகவல்
x
தினத்தந்தி 14 April 2020 12:18 AM GMT (Updated: 14 April 2020 12:18 AM GMT)

டோக்கியோ ஒலிம்பிக் தள்ளிவைக்கப்பட்டதால் பல கோடி ரூபாய் கூடுதல் செலவை எதிர்கொள்ள வேண்டி இருப்பதாக ஐ.ஓ.சி. தலைவர் தாமஸ் பேச் கூறியுள்ளார்.

டோக்கியோ, 

32-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 9-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. உலகம் முழுவதும் வியாபித்துள்ள கொரோனாவின் உக்கிரத்தால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு (2021) ஜூலை, ஆகஸ்டு மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. 

ஏற்கனவே ஒலிம்பிக் போட்டிக்கு ஜப்பான் அரசாங்கம் ரூ.1 லட்சம் கோடி வரை செலவு செய்துள்ளது. ஆனால் போட்டி ஒத்திவைக்கப்பட்டிருப்பதால் மைதானம், ஒலிம்பிக் கிராமம் பராமரிப்பு, பிரபலப்படுத்துவதற்கான இதர ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றுக்காக ஜப்பான் அரசு இன்னும் முதலீடு செய்ய வேண்டி இருக்கும். 

இது குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி.) தலைவர் தாமஸ் பேச் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘ஒலிம்பிக் போட்டியை ஓராண்டுக்கு தள்ளிவைத்திருப்பதன் மூலம் சில நூறு மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.2 ஆயிரம் கோடியை தாண்டும்) கூடுதல் செலவை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. 

இது போன்ற சூழலில் கூடுதல் தொகையை ஜப்பான் அரசாங்கம் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது உரிமம் வழங்கும் போதே போடப்பட்ட ஒப்பந்தம். அதே சமயம் கூடுதல் செலவை பகிர்ந்து கொள்ள வேண்டிய பொறுப்பு ஐ.ஓ.சி.க்கும் இருக்கிறது.’ என்றார்.

Next Story