துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 4 Aug 2020 10:23 PM GMT (Updated: 2020-08-05T03:53:29+05:30)

கொரோனா அச்சம் காரணமாக கால்பந்து போட்டி விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

* கொரோனா அச்சம் காரணமாக கால்பந்து போட்டி விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போது கால்பந்து போட்டியின் போது வேண்டுமென்றே எதிரணியினர் மற்றும் நடுவர் உள்ளிட்ட போட்டி அதிகாரிகளின் அருகில் சென்று இருமினால் சம்பந்தப்பட்ட வீரருக்கு சிவப்பு அட்டை காண்பித்து வெளியேற்றலாம் என்று சர்வதேச கால்பந்து சங்கம் அறிவித்துள்ளது. இந்த விஷயத்தில் சம்பவத்தின் தன்மையை பொறுத்து நடுவர்கள் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர், வீராங்கனைகளுக்கான பயிற்சி முகாம் டெல்லியில் உள்ள கர்னிசிங் ஸ்டேடியத்தில் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கும் என்று இந்திய ரைபிள் சங்கம் கூறியிருந்தது. கொரோனா பரவலால் தற்போது பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுவதால் இந்த பயிற்சி முகாம் காலவரையின்றி தள்ளிவைக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

* வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக அக்டோபர் 4, 6, 9 ஆகிய தேதிகளில் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட திட்டமிட்டு இருந்தது. கொரோனா அச்சுறுத்தலால் இந்த தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 2021 அல்லது 2022-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக இந்த 20 ஓவர் தொடரை நடத்தலாம் என்று இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் முடிவு செய்து இருக்கின்றன.

Next Story