தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: கடினமான பிரிவில் சாய்னா நேவால்


தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: கடினமான பிரிவில் சாய்னா நேவால்
x
தினத்தந்தி 31 Dec 2020 4:43 AM IST (Updated: 31 Dec 2020 4:43 AM IST)
t-max-icont-min-icon

10 மாதங்களுக்கு பிறகு களம் காண காத்திருக்கும் இந்திய வீராங்கனை சாய்னா நேவாலுக்கு முதல் சுற்றே கடினமாக அமைந்துள்ளது.

பாங்காக், 

யோனக்ஸ் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி வருகிற 12-ந்தேதி முதல் 17-ந்தேதி வரையும், டோயோட்டா தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் வருகிற 19-ந்தேதி முதல் 24-ந்தேதி வரையும் ரசிகர்கள் இன்றி பாங்காக்கில் நடக்கிறது. இந்த போட்டிகளில் யார்-யாருடன் மோதுவது என்ற விவரம் குலுக்கல் மூலம் முடிவு செய்யப்பட்டது. இதன்படி 10 மாதங்களுக்கு பிறகு களம் காண காத்திருக்கும் இந்திய வீராங்கனை சாய்னா நேவாலுக்கு முதல் சுற்றே கடினமாக அமைந்துள்ளது. அவர் யோனக்ஸ் ஓபனில் முதல் ரவுண்டில் 4-ம் நிலை வீராங்கனை நஜோமி ஒகுஹராவையும் (ஜப்பான்), மற்றொரு போட்டியில் முதல் சுற்றில் உள்ளூர் நட்சத்திரமும், முன்னாள் உலக சாம்பியனுமான ராட்சனோக் இன்டானோனையும் சந்திக்கிறார். அதே சமயம் மற்றொரு இந்திய வீராங்கனையும், உலக சாம்பியனுமான பி.வி.சிந்துவுக்கு தொடக்க சுற்றுகள் எளிதாக அமைந்துள்ளது. யோனக்ஸ் போட்டியில் முதல் சுற்றில் மியா பிளிச்பெல்டையும் (டென்மார்க்), இன்னொரு தொடரில் தாய்லாந்து மங்கை புசானனையும் எதிர்கொள்கிறார். ஸ்ரீகாந்த், சவுரப் வர்மா, எச்.எஸ்.பிரனாய், காஷ்யப், லக்‌ஷயா சென், சாய்பிரனீத், சமீர் வர்மா ஆகிய இந்திய வீரர்களும் இந்த போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். கொரோனா அச்சத்தால் இந்த போட்டிகளில் இருந்து சீன வீரர்கள் விலகி விட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story