2032-ம் ஆண்டு ஒலிம்பிக் வரை இந்திய மல்யுத்தத்துக்கு உத்தரபிரதேச அரசு ஆதரவு

2032-ம் ஆண்டு ஒலிம்பிக் வரை இந்திய மல்யுத்தத்துக்கு உத்தரபிரதேச அரசு ஆதரவு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு 2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி வரை ஆதரவுக்கரம் நீட்ட உத்தரபிரதேச மாநில அரசு முன்வந்துள்ளது. இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் வேண்டுகோளை ஏற்று மல்யுத்தத்தை தத்தெடுத்து அதன் வளர்ச்சிக்கு எல்லா வகையிலும் உதவி அளிக்க உத்தரபிரதேச அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ்பூஷன் ஷரண்சிங் கூறுகையில், ‘சிறிய மாநிலமான ஒடிசா ஆக்கி விளையாட்டுக்கு சிறப்பான முறையில் ஆதரவு அளித்து வருகிறது. இவ்வளவு பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தால் ஏன் மல்யுத்தத்தை ஆதரிக்க முடியாது என்று நாங்கள் நினைத்தோம். எனவே நாங்கள் உத்தரபிரதேச மாநில அரசை அணுகினோம். எங்களது வேண்டுகோளை முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஏற்றுக்கொண்டார்.
எங்களது திட்டத்தின்படி 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் வரை ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ.10 கோடி (மொத்தம் ரூ.30 கோடி) அளிக்கும்படி கேட்டு இருக்கிறோம். அடுத்த ஒலிம்பிக் (2028) வரை ஆண்டுக்கு ரூ.15 கோடியும் (மொத்தம் ரூ.60 கோடி), அதற்கு அடுத்த ஒலிம்பிக் (2032) வரை ஆண்டுக்கு ரூ.20 கோடியும் (மொத்தம் ரூ.80 கோடி) ஸ்பான்சராக அளிக்குமாறு கேட்டுள்ளோம்.
இது நடைமுறைக்கு வந்தால் உயர்மட்ட வீரர்களுக்கு மட்டுமின்றி ‘கேடட்’ நிலை வீரர்களுக்கும் எங்களால் முழுமையாக ஆதரவு அளிக்க முடியும். இளம் வீரர்களையும் வெளிநாட்டு பயிற்சிக்கு அனுப்பலாம். நாங்கள் மல்யுத்தத்தை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியமானதாகும்’ என்றார்.
Related Tags :
Next Story