பாராஒலிம்பிக் பேட்மிண்டனில் இந்திய வீரர் பிரமோத் வெற்றி


பாராஒலிம்பிக் பேட்மிண்டனில் இந்திய வீரர் பிரமோத் வெற்றி
x
தினத்தந்தி 1 Sep 2021 9:15 PM GMT (Updated: 1 Sep 2021 9:15 PM GMT)

பாராஒலிம்பிக்கில் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரமோத் வெற்றியுடன் தொடங்கினார்.

டோக்கியோ, 

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. போட்டியின் 9-வது நாளான நேற்று இந்தியாவுக்கு பதக்கம் ஏதும் கிடைக்கவில்லை. பெரும்பாலான பிரிவுகளில் ஏமாற்றமே மிஞ்சியது.

ஆண்களுக்கான கிளப் துரோ போட்டியின் (சிறிய உருளை கட்டையை வீசுவது) இறுதி சுற்றில் இந்திய வீரர்களான ஆசிய விளையாட்டு சாம்பியன் அமித் குமார் சரோஹா (27.77 மீட்டர் தூரம்) 5-வது இடமும், தரம்பிர் (25.59 மீட்டர்) 8-வது இடமும் பெற்று பதக்கவாய்ப்பை கோட்டைவிட்டனர். இதில் ரஷியாவின் முசா தாய்மாஜோவ் 35.42 மீட்டர் தூரம் உருளையை எறிந்து புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.

பாராஒலிம்பிக்கில் அறிமுக போட்டியாக இடம் பெற்றுள்ள பேட்மிண்டனில் ஆண்களுக்கான ஒற்றையர் லீக் ஆட்டம் ஒன்றில் (ஏ பிரிவு) உலகின் நம்பர் ஒன் வீரரான இந்தியாவின் பிரமோத் பகத் 21-10, 21-23, 21-9 என்ற செட் கணக்கில் சக நாட்டவரான மனோஜ் சர்காரை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கினார். சிறு வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டவரான பிரமோத் பகத் அடுத்து உக்ரைனின் ஒலக்சாண்டர் சிர்கோவை எதிர்கொள்கிறார்.

பெண்கள் ஒற்றையர் ‘ஏ’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பலாக் கோலி 4-21, 7-21 என்ற நேர் செட்டில் ஜப்பானின் அயோகோ சுசுகியிடம் வெறும் 19 நிமிடங்களில் சரண் அடைந்தார். இதே போல் கலப்பு இரட்டையரில் (பி பிரிவு) இந்தியாவின் பலாக் கோலி- பிரமோத் பகத் ஜோடி 9-21, 21-15, 19-21 என்ற செட் கணக்கில் பிரான்சின் லுகாஸ் மஜூர்- பாஸ்டின் நோயல் இணையிடம் போராடி வீழ்ந்தது.

நீச்சலில் 100 மீட்டர் பிரஸ்டிரோக் பிரிவில் இந்திய வீரர் சுயாஷ் ஜாதவ் நீந்தும் போது அதற்குரிய விதிமுறையை சரியாக கடைபிடிக்காததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

துப்பாக்கி சுடுதலில் தனிநபர் பிரிவில் தங்கம் வென்று வரலாறு படைத்த இந்தியாவின் அவனி லெகரா 10 மீட்டர் ஏர்ரைபிள் புரோன் கலப்பு பிரிவில் சித்தார்த்தா பாபு, தீபக் ஆகியோருடன் இணைந்து களம் இறங்கினார். இந்த கூட்டணி இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது.


Next Story