சக வீராங்கனைக்காக விட்டுக்கொடுக்க வற்புறுத்தினார்: பயிற்சியாளர் மீது மனிகா பத்ரா பரபரப்பு புகார்


சக வீராங்கனைக்காக விட்டுக்கொடுக்க வற்புறுத்தினார்: பயிற்சியாளர் மீது மனிகா பத்ரா பரபரப்பு புகார்
x
தினத்தந்தி 3 Sep 2021 7:15 PM GMT (Updated: 3 Sep 2021 7:15 PM GMT)

டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று வரை மணிகா பத்ரா முன்னேறியிருந்தார்.


புதுடெல்லி

டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று வரை முன்னேறிய இந்திய நட்சத்திர வீராங்கனை மனிகா பத்ரா தனது ஆட்டத்தின் போது தேசிய பயிற்சியாளர் சவும்யாதீப் ராயின் ஆலோசனையை பெறாமல் தன்னிச்சையாக செயல்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அவருக்கு விளக்கம் அளிக்கும்படி இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம் நோட்டீசு அனுப்பி இருந்தது. 

இதற்கு மனிகா பத்ரா பதிலளித்து இருக்கிறார். அதில் அவர் ஒலிம்பிக் தகுதி சுற்றில் சக வீராங்கனைக்கு (சுதிர்தா முகர்ஜிக்கு) எதிரான போட்டியில் தன்னை விட்டுக்கொடுத்து (மேட்ச் பிச்கிங்) செயல்படும்படி தேசிய பயிற்சியாளர் சவும்யாதீப் ராய் வற்புறுத்தினார் என்று பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

இது குறித்து மனிகா பத்ரா அளித்து இருக்கும் விளக்கத்தில், ‘தோகாவில் கடந்த மார்ச் மாதம் நடந்த ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியின் போது தேசிய பயிற்சியாளரிடம் பயிற்சி பெறும் வீராங்கனை ஒருவர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் வகையில் அவருக்கு எதிரான ஆட்டத்தில் என்னை விட்டுக்கொடுக்கும்படி பயிற்சியாளர் சவும்யாதீப் ராய் அழுத்தம் கொடுத்தார். 

இதற்காக அவர் என்னை ஓட்டல் அறையில் சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் பேசினார். ஆனால் அவரது தவறான கட்டளைக்கு நான் உடன்பட மறுத்து விட்டேன். அது குறித்து டேபிள் டென்னிஸ் சங்க அதிகாரிகளிடம் புகாரும் தெரிவித்தேன். ஆட்டத்தை தாரை வார்க்கும்படி பயிற்சியாளர் கூறியதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதனை சரியான நேரத்தில் உரியவர்களிடம் அளிக்க தயாராக இருக்கிறேன்.

 பயிற்சியாளர் விளையாட்டு நெறிமுறைக்கு மாறாக செயல்பட்டதால் தான் ஒலிம்பிக் போட்டியின் போது அவரிடம் ஆலோசனை பெறுவதை தவிர்த்தேன். மற்றபடி ஆட்டத்துக்கு அவமரியாதை ஏற்படுத்தும் நோக்கம் எனக்கு எதுவும் கிடையாது’ என்று அவர் அதில் கூறியிருப்பதாக இந்திய டேபிள் டென்னிஸ் சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Next Story