பாராஒலிம்பிக்கில் தொடரும் இந்தியாவின் பதக்கவேட்டை: மனிஷ் நார்வால், பிரமோத் பகத் தங்கம் வென்று சாதனை


பாராஒலிம்பிக்கில் தொடரும் இந்தியாவின் பதக்கவேட்டை: மனிஷ் நார்வால், பிரமோத் பகத் தங்கம் வென்று சாதனை
x
தினத்தந்தி 5 Sep 2021 1:27 AM GMT (Updated: 5 Sep 2021 1:27 AM GMT)

பாராஒலிம்பிக்கில் இந்தியாவின் மனிஷ் நார்வால், பிரமோத் பகத் ஆகியோர் நேற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர். நடப்பு தொடரில் இந்தியா இதுவரை 17 பதக்கம் வென்று வீறுநடை போடுகிறது.

டோக்கியோ,

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் 12-வது நாளான நேற்றைய தினம் இந்தியாவுக்கு தித்திப்பு நிறைந்ததாக அமைந்தது. ஒரே நாளில் 2 தங்கம் உள்பட 4 பதக்கம் கிட்டியது.

துப்பாக்கி சுடுதலில் இருபாலரும் பங்கேற்கும் கலப்பு 50 மீட்டர் பிஸ்டல் எஸ்.எச்.1 பிரிவின் தகுதி சுற்றில் மொத்தம் 34 வீரர், வீராங்கனைகள் களம் புகுந்தனர். இதில் இருந்து 7 வீரர், ஒரு வீராங்கனை என்று 8 பேர் இறுதி சுற்றை எட்டினர். இதில் இந்தியாவின் மனிஷ் நார்வால் 218.2 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து புதிய பாராஒலிம்பிக் சாதனையுடன் தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். மற்றொரு இந்திய வீரர் சிங்ராஜ் அதானா 216.7 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். ரஷியாவின் செர்ஜி மாலிஷிவ் 196.8 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கம் பெற்றார்.

மனைவி தந்த அதிர்ஷ்டம்

முதல் ரவுண்டுகளில் மோசமாக சுட்ட மனிஷ் நார்வால் ஆரம்பத்தில் பின்தங்கி இருந்தாலும் கடைசி கட்டத்தில் விறுவிறுவென முன்னேறி செர்ஜி மலிஷிவ்வை பின்னுக்கு தள்ளினார். 19 வயதான அரியானாவைச் சேர்ந்த மனிஷ் நார்வால் சிறு வயதில் கால்பந்து வீரராக வேண்டும் என்று ஆசைப்பட்டார். துரதிர்ஷ்டவசமாக வலது கையில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக கால்பந்து வீரர் கனவு பொய்த்து போனது. அதன் பிறகு குடும்ப நண்பர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் 2016-ம் ஆண்டில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியை தொடங்கிய அவர் இப்போது பாராஒலிம்பிக் சாம்பியனாக உருவெடுத்துள்ளார்.

சிங்ராஜிக்கு இது 2-வது பதக்கமாகும். ஏற்கனவே 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலம் வென்று இருந்தார். சிறுவயதில் போலியோவால் பாதிக்கப்பட்ட 39 வயதான சிங்ராஜ் அரியானா மாநிலம் பஹதுர்கர் நகரைச் சேர்ந்தவர். பரிதாபாத்தில் உள்ள பள்ளியில் சேர்மனாக பணியாற்றிய சிங்ராஜ் 4 ஆண்டுக்கு முன்பு தான் துப்பாக்கி சுடுதல் களத்தில் குதித்தார். இவரது தந்தை பிரேம்சிங் விவசாயி மற்றும் சமூக நல ஆர்வலர் ஆவார். இறுதிப்போட்டியின் போது விசேஷமான தொப்பி ஒன்றை அணிந்திருந்த சிங்ராஜ், ‘இந்த தொப்பி எனது மனைவி எனக்கு பரிசாக அளித்தது. அது என்னுடைய அதிர்ஷ்டமான தொப்பி’ என்று கூறி பூரித்து போனார்.

பேட்மிண்டனில்

பிரமோத் பகத் கலக்கல்

ஆண்களுக்கான பேட்மிண்டனில் ஒற்றையர் எஸ்.எல்.3 பிரிவில் இந்திய வீரரும், உலக சாம்பியனுமான பிரமோத் பகத் அரைஇறுதியில் 21-11, 21-16 என்ற நேர் செட்டில் ஜப்பானின் டேசுக் புஜிஹராவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். மாலையில் அங்கு நடந்த இறுதி சுற்றில் பிரமோத் பகத் 21-14, 21-17 என்ற நேர் செட்டில் 45 நிமிடங்களில் இங்கிலாந்தின் டேனியல் பெத்தேலை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை உச்சிமுகர்ந்து வரலாறு படைத்தார். 2-வது செட்டில் ஒரு கட்டத்தில் 4-11 என்று பின்தங்கிருந்த பிரமோத் பகத் அதன் பிறகு அதிரடியாக மீண்டு வந்து வெற்றியை வசப்படுத்தினார்.

இதே பிரிவில் இந்தியாவின் மனோஜ் சர்கார் அரைஇறுதியில் 8-21, 10-21 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின் டேனியல் பெத்தேலிடம் பணிந்தார். அதைத் தொடர்ந்து 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஆடிய மனோஜ் சர்கார் 22-20, 21-13 என்ற நேர் செட்டில் ஜப்பானின் டேசுக் புஜிஹராவை சாய்த்து வெண்கலப்பதக்கத்தை தனதாக்கினார். 31 வயதான உத்தரகாண்டை சேர்ந்த மனோஜ் சர்கார் ஒரு வயதில் போலியோ தாக்குதலுக்குள்ளாகி வலது கால் ஊனமுற்றவர் ஆவார்.

முன்னதாக கலப்பு இரட்டையர் அரைஇறுதியில் இந்தியாவின் பிரமோத் பகத்-பலாக் கோலி ஜோடி 3-21, 15-21 என்ற நேர் செட்டில் சுசான்டோ ஹாரி- ஒக்டிலா ராட்ரி (இந்தோனேஷியா) இணையிடம் தோல்வியை தழுவியது. பிரமோத்-பலாக் கோலி ஜோடி இன்று வெண்கலப்பதக்கத்துக்கு விளையாட இருக்கிறது.

இன்னும் வரும்

பேட்மிண்டன் விளையாட்டு பாராஒலிம்பிக்கில் தற்போது தான் முதல்முறையாக சேர்க்கப்பட்டுள்ளது. முதல் சீசனிலேயே இந்திய வீரர்கள் பதக்கவேட்டை நடத்தி அமர்க்களப்படுத்தியுள்ளனர். அத்துடன் எஸ்.எல்.4 பிரிவில் சுஹாஸ் யதிராஜ், எஸ்.எச்.6 பிரிவில் கிருஷ்ணா நாகர் ஆகிய இந்தியர்களும் இறுதிப்போட்டிக்கு வந்து பதக்கத்தை உறுதி செய்துள்ளனர். யதிராஜ், பிரான்சின் லுகாஸ் மஜூருடனும், கிருஷ்ணா நாகர், ஹாங்காங்கின் சு மான் காயுடனும் இன்று தங்களது இறுதி சுற்றில் மோத உள்ளனர்.

‘நம்பர் ஒன்’ வீரரான பிரமோத் பகத் கூறுகையில், ‘இது எனக்கு மிகவும் பெருமைக்குரிய தருணம். பேட்மிண்டன் இந்த பாராஒலிம்பிக்கில் தான் அறிமுகமாகியுள்ளது. பேட்மிண்டனில் இந்தியாவுக்காக முதல் தங்கப்பதக்கத்தை வென்றது மறக்க முடியாத தருணமாகும். இதே வீரரிடம் 2 ஆண்டுக்கு முன்பு இதே இடத்தில் தோற்று இருந்தேன். இப்போது அதே இடத்தில் வைத்து அவரை வீழ்த்தி இருக்கிறேன்’ என்றார். 33 வயதான ஒடிசாவைச் சேர்ந்த பிரமோத் பகத் 4 வயதில் போலியோ தாக்கி இடது முழங்காலுக்கு கீழ் பாதிப்புக்குள்ளானார். இதனால் ஒரு காலை கெந்தியபடி தான் நடப்பார்.

இந்திய பதக்க ஹீரோக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இன்று நிறைவு

பாராஒலிம்பிக் திருவிழா இன்று நிறைவடைய உள்ள நிலையில் இந்தியா இதுவரை 4 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம் என்று மொத்தம் 17 பதக்கத்துடன் பட்டியலில் 26-வது இடத்தில் உள்ளது. சீனா 200 பதக்கத்துடன் (93 தங்கம், 57 வெள்ளி, 50 வெண்கலம்) முதலிடமும், இங்கிலாந்து 122 பதக்கத்துடன் 2-வது இடமும்(41 தங்கம், 38 வெள்ளி, 43 வெண்கலம்) வகிக்கிறது.
மனிஷ் நார்வாலுக்கு ரூ.6 கோடி பரிசு

பாராஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அரியானாவைச் சேர்ந்த துப்பாக்கி சுடுதல் வீரர் மனிஷ் நார்வாலுக்கு ரூ.6 கோடியும், வெள்ளிப்பதக்கம் கைப்பற்றிய சிங்ராஜிக்கு ரூ.4 கோடியும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.

Next Story