பாராஒலிம்பிக் கோலாகல நிறைவு: கடைசி நாளில் இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம்


பாராஒலிம்பிக் கோலாகல நிறைவு: கடைசி நாளில் இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கம்
x
தினத்தந்தி 6 Sep 2021 1:10 AM GMT (Updated: 6 Sep 2021 1:10 AM GMT)

பாராஒலிம்பிக் கடைசி நாளில் மேலும் ஒரு தங்கம், ஒரு வெள்ளிப்பதக்கத்தை வென்ற இந்தியா மொத்தம் 19 பதக்கத்துடன் 24-வது இடத்தை பிடித்து வரலாறு படைத்தது.

டோக்கியோ,

மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த மாதம் 24-ந்தேதி தொடங்கியது. இதில் அகதிகள் அணி உள்பட 162 நாடுகளைச் சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று 22 வகையான விளையாட்டுகளில் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். சாதனைக்கு ஊனம் ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்த அவர்களின் செயல்பாடு காண்போரை சிலிர்க்க வைத்தது. இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் களம் புகுந்தனர்.

வழக்கத்திற்கு மாறாக இந்த முறை இந்தியர்கள் பதக்கவேட்டை நடத்தி தேசத்துக்கு பெருமை சேர்த்து குதூகலப்படுத்தினர். முதல் 12 நாட்களில் 17 பதக்கங்களை வென்றிருந்த இந்தியா கடைசி நாளான நேற்று மேலும் 2 பதக்கத்தை கபளீகரம் செய்து அசத்தியது.

பேட்மிண்டனில் தங்கம்

பேட்மிண்டனில் ஆண்களுக்கான ஒற்றையர் எஸ்.எச்.6 பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகர், ஹாங்காங் வீரர் சூ மன் காயுடன் பலப்பரீட்சை நடத்தினார். இருவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் ஷாட்டுகளை அடித்ததால் களத்தில் அனல் பறந்தது. தொடக்கத்தில் ஒரு கட்டத்தில் 15-17 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த கிருஷ்ணா நாகர் அதில் இருந்து மீண்டு வந்து வரிசையாக 6 கேம்களை வென்று முதல்செட்டை கைப்பற்றினார். தொடர்ந்து 2-வது செட்டை நழுவ விட்ட கிருஷ்ணா கடைசி செட்டின் ஆரம்பத்தில் கிடைத்த முன்னிலையை இறுதிவரை தக்க வைத்துக் கொண்டு மகுடம் சூடினார்.முடிவில் கிருஷ்ணா நாகர் 21-17, 16-21, 21-17 என்ற செட் கணக்கில் சூ மன் காயை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். இந்த பாராஒலிம்பிக்கில் இந்தியாவின் 5-வது தங்கப்பதக்கம் இதுவாகும். 22 வயதான கிருஷ்ணா நாகர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். உயரம் குன்றியவரான கிருஷ்ணா நாகர், இந்த பதக்கத்தின் மூலம் தனது கனவு நனவாகி விட்டதாக கூறி உணர்ச்சி வசப்பட்டார். ‘பேட்மிண்டனில் 5-6 பதக்கம் வெல்வோம் என்று உறுதியாக நினைத்து இருந்தோம். 4 பதக்கம் தான் வென்றுள்ளோம். ஓரிருவரின் செயல்பாடு சற்று குறைந்து போனது. அடுத்து வரும் போட்டிகளில் மேலும் முன்னேற்றம் காண்போம்’ என்றும் குறிப்பிட்டார்.

கலெக்டருக்கு வெள்ளிப்பதக்கம்

முன்னதாக பேட்மிண்டனில் எஸ்.எல்.4 பிரிவின் இறுதி சுற்றில் இந்திய வீரர் சுஹாஸ் யதிராஜ் 21-15, 17-21, 15-21 என்ற செட் கணக்கில் 2 முறை உலக சாம்பியனான பிரான்சின் லுகாஸ் மஜூரிடம் போராடி தோற்றார். திரிலிங்கான இந்த ஆட்டம் 62 நிமிடங்கள் நீடித்தது. இந்த தோல்வியின் மூலம் சுஹாஸ் யதிராஜ் வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.

ஐ.ஏ.எஸ். அதிகாரியான 38 வயதான சுஹாஸ் யதிராஜ் கணுக்காலில் பாதிப்பு அடைந்தவர் ஆவார். உத்தரபிரதேச மாநிலம் கவுதம் புத்தா நகர் மாவட்டத்தின் கலெக்டராக பணியாற்றும் சுஹாஸ் யதிராஜ், பாராஒலிம்பிக்கில் பதக்கத்தை ருசித்த முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்ற சிறப்பை பெற்றார்.

வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டங்களில் ஒற்றையர் பிரிவில் தருண் தில்லான், கலப்பு இரட்டையரில் பிரமோத் பகத்- பலாக் கோலி ஜோடியினர் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தனர்.

பேட்மிண்டன் விளையாட்டு இந்த பாராஒலிம்பிக்கில் தான் முதல்முறையாக சேர்க்கப்பட்டது. அறிமுக சீசனிலேயே பேட்மிண்டனில் மட்டும் இந்தியா 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் வென்று கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தியாவுக்கு 24-வது இடம்

பாராஒலிம்பிக் திருவிழா நேற்றுடன் முடிவுக்கு வந்த நிலையில் பதக்கப்பட்டியலில் இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என்று மொத்தம் 19 பதக்கங்களுடன் 24-வது இடத்தை பிடித்து புதிய சரித்திரம் படைத்தது. இதற்கு முன்பு 1960-ம் ஆண்டில் இருந்து 2016-ம் ஆண்டு வரையிலான பாராஒலிம்பிக் அனைத்தையும் சேர்த்து மொத்தமே இந்தியா 12 பதக்கம் தான் வென்று இருந்தது. இந்த முறை ஒரே பாரா ஒலிம்பிக் தொடரிலேயே 19 பதக்கங்களை மகசூல் செய்து பிரமாதப்படுத்தியுள்ளது.

பதக்கப்பட்டியலில் மொத்தம் 86 நாடுகள் இடம் பிடித்தன. முதல் நாளில் இருந்தே முழுமையாக ஆதிக்கம் செலுத்திய சீனா 96 தங்கம், 60 வெள்ளி, 51 வெண்கலம் என்று 207 பதக்கத்துடன் முதலிடத்தை ஆக்கிரமித்தது. இங்கிலாந்து 124 பதக்கத்துடன் 2-வது இடத்தை பெற்றது. போட்டியை நடத்திய ஜப்பானுக்கு 13 தங்கம், 15 வெள்ளி, 23 வெண்கலம் என்று 51 பதக்கத்துடன் 11-வது இடம் கிடைத்தது.

நிறைவடைந்தது

பாராஒலிம்பிக் நிறைவு விழா அங்குள்ள ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சி, வாணவேடிக்கை, பாரம்பரிய நடனம், இசை வெள்ளத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. நாடுகளின் அணிவகுப்பின் போது இந்திய அணிக்கு, 2 பதக்கம் வென்ற இளம் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அவனி லெகரா தேசிய கொடியுடன் வீல்சேரில் அமர்ந்தபடி உற்சாகமாக வலம் வந்தார். ஒலிம்பிக் தீபம் அணைக்கப்பட்டதுடன் பாராஒலிம்பிக் விளையாட்டுக்குரிய கொடி இறக்கப்பட்டு அது 2024-ம் ஆண்டு பாராஒலிம்பிக் நடக்க உள்ள பாரீசிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. பாரீஸ் மேயர் அன்னி ஹிடால்கோ அதை பெற்றுக்கொண்டார்.

கொரோனா அச்சுறுத்தலை சமாளித்து ஒலிம்பிக் போட்டியை வெற்றிகரமாக நடத்திய ஜப்பான் இப்போது பாரா ஒலிம்பிக்கையும் சிக்கலின்றி நடத்தி முடித்து விட்டது. ‘அரிகாட்டோ ‘(ஜப்பான் மொழியில் நன்றி) என்ற வாசகத்தை மெகா திரையில் காண்பித்து விழாவை உணர்வுபூர்வமாக நிறைவு செய்தனர்.

Next Story