இந்தோனேஷிய பேட்மிண்டன்: அரையிறுதியில் சிந்து தோல்வி


இந்தோனேஷிய பேட்மிண்டன்: அரையிறுதியில் சிந்து தோல்வி
x
தினத்தந்தி 27 Nov 2021 9:33 PM GMT (Updated: 27 Nov 2021 9:33 PM GMT)

இந்தோனேஷிய பேட்மிண்டன் போட்டியில் அரையிறுதியில் சிந்து தோல்வியைத் தழுவினார்.

பாலி, 

இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டி பாலி நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதி ஆட்டத்தில் உலக சாம்பியனும், தரவரிசையில் 7-வது இடத்தில் இருப்பவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, முன்னாள் உலக சாம்பியனும், 8-ம் நிலை வீராங்கனையுமான ராட்சனோக் இன்டானோனை (தாய்லாந்து) சந்தித்தார். 

54 நிமிடம் நடந்த பரபரப்பான இந்த மோதலில் சிந்து 21-15, 9-21, 14-21 என்ற செட் கணக்கில் ராட்சனோக்கிடம் வீழ்ந்து தோல்வியைச்சந்தித்தார். 26 வயதான சிந்து கடந்த வாரம் நடந்த இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் மற்றும் முந்தைய மாதம் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் போட்டியிலும் அரைஇறுதியுடன் வெளியேறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரைஇறுதியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி கூட்டணி 16-21, 18-21 என்ற நேர்செட்டில் இந்தோனேஷியாவின் மார்கஸ் பெர்னால்டி ஜிடோன்-கெவின் சஞ்சயா சுகாமுல்ஜோ இணையிடம் தோற்று ஏமாற்றம் அளித்தது.


Next Story