செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: புட்பாய்சனால் கார்ல்சன் பாதிப்பு.. பிரக்ஞானந்தாவுக்கு சாதகம்..?


செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டி: புட்பாய்சனால் கார்ல்சன் பாதிப்பு.. பிரக்ஞானந்தாவுக்கு சாதகம்..?
x
தினத்தந்தி 23 Aug 2023 8:15 AM GMT (Updated: 23 Aug 2023 8:17 AM GMT)

பிரக்ஞானந்தாவுக்கு எதிரான இறுதிப்போட்டிக்கு தன்னை தயார்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதாக கார்ல்சன் கூறினார்.

உலகக்கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான நார்வே நாட்டைச் சேர்ந்த மாக்னஸ் கார்ல்சன், இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா ஆகியோர் மோதுகின்றனர். இரண்டு சுற்றுகள் கொண்ட இறுதிப்போட்டியின் முதல் சுற்று நேற்று நடந்தது. ஆட்டத்தின் 35வது நகர்த்தலுக்கு பிறகு முதல் சுற்று டிராவில் முடிந்தது. இதையடுத்து இன்று 2வது சுற்று ஆட்டம் நடைபெற உள்ளது. முதல் சுற்றில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 2வது சுற்றில் கருப்பு நிற காய்களுடன் விளையாட உள்ளார். 2வது சுற்று போட்டியும் டிரா ஆனால் டை பிரேக்கர் முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்.

முதல் ஆட்டத்தை டிரா செய்த கார்ல்சன் இன்று பிரக்ஞானந்தாவுக்கு கடும் சவாலாக காய்களை நகர்த்துவார் என கணிக்கப்பட்டுள்ளது. எனினும், அவரது உடல்நல பாதிப்பு பிரக்ஞானந்தாவுக்கு சாதகமாக திரும்பும் என கூறப்படுகிறது.

நேற்றைய போட்டி முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த கார்ல்சன், அரையிறுதியில் வெற்றி பெற்ற பின்னர் புட்பாய்சன் ஆனதால் பிரக்ஞானந்தாவுக்கு எதிரான இறுதிப்போட்டிக்கு தன்னை தயார்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறினார்.

அபாசோவுக்கு எதிரான ஆட்டத்திற்குப் பிறகு எனக்கு புட்பாய்சன் ஆகிவிட்டது, கடந்த இரண்டு நாட்களாக என்னால் சாப்பிட முடியவில்லை; எனினும் முதல் சுற்றில் சிறப்பாக ஆடியதால் மகிழ்ச்சி அடைகிறேன், என கார்ல்சன் குறிப்பிட்டார்.

எனினும், இன்றைய ஆட்டத்தில் அவரது உடல்நிலையைப் பொருத்து ஆட்டத்திறனில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நிகழ்ந்தால் அது பிரக்ஞானந்தாவுக்கு சாதகமாக அமையும்.


Next Story