ஆல்இங்கிலாந்து பேட்மிண்டன்: முதல் சுற்றில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி


ஆல்இங்கிலாந்து பேட்மிண்டன்: முதல் சுற்றில் பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி
x

நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் பி.வி.சிந்து, சீனாவின் ஜாங் யி மேனை எதிர்கொண்டார்.

பர்மிங்காம்,

மொத்தம் ரூ.10¼ கோடி பரிசுத்தொகைக்கான ஆல்இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் பி.வி.சிந்து, 17-ம் நிலை வீராங்கயைான ஜாங் யி மேனை (சீனா) எதிர்கொண்டார்.

இதில் முதல் செட்டில் 16-13 என்று முன்னிலை பெற்ற சிந்து, அதன் பிறகு தொடர்ச்சியாக 7 கேம்களை இழந்ததுடன் அந்த செட்டையும் தவற விட்டார். 2-வது செட்டில் தொடக்கத்தில் 5-5 என்று சமநிலையில் இருந்த சிந்து, அதன் பிறகு சில தவறுகளை இழைத்ததால் சரிவுக்குள்ளாகி மீள முடியாமல் பணிந்தார்.

39 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த மோதலில் சிந்து 17-21, 11-21 என்ற நேர் செட்டில் தோற்று அதிர்ச்சிக்குள்ளானார். ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரும், முன்னாள் உலக சாம்பியனுமான பி.வி.சிந்து, இந்த ஆண்டில் ஒரு போட்டியில் முதல் சுற்றுடன் நடையை கட்டுவது இது 3-வது முறையாகும்.

பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் திரீஷா ஜாலி- காயத்ரி ஜோடி 21-18, 21-14 என்ற நேர் செட்டில் தாய்லாந்தின் ஜோங்கோல்பான்- ரவின்டா பிரஜோங்ஜா இணையை தோற்கடித்தது.


Next Story