ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்று அசத்திய இந்திய மகளிர் அணி


ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: தங்கம் வென்று அசத்திய இந்திய மகளிர் அணி
x

Image Courtesy: @BAI_Media

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தது.

சிலாங்கூர்,

மலேசியாவில் உள்ள சிலாங்கூரில் ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. இதில் ஆரம்பம் முதலே பி.வி.சிந்து தலைமையிலான இந்திய மகளிர் அணி சிறப்பாக விளையாடியது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற மகளிர் அணிகளுக்கான இறுதிப்போட்டியில் இந்திய அணி தாய்லாந்தை எதிர்கொண்டது.

இதில் முதலில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பி.வி.சிந்து மற்றும் சுபனிடா ஆகியோர் மோதினர். இதில் பி.வி. சிந்து 21-12, 21-12 என்ற கணக்கில் சுபனிடாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தார். இதனால் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.

இதையடுத்து நடைபெற்ற இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் காயத்ரி கோபிசந்த் மற்றும் ட்ரீசா ஜாலி ஜோடி 21-16, 18-21, 21-16 என்ற செட் கணக்கில் ஜோங்கல்பம் கிடிதரகுல் - ரவிந்தா பிரஜோங்ஜல் ஜோடியை வீழ்த்தியது. இதன்மூலம், இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றது.

அதன் பிறகு, அஸ்மிதா சாலிஹா 11-21, 14-21 என்ற கணக்கில் புசானன் ஓங்பாம்ருங்பானிடம் தோல்வியை சந்திக்க நேரிட்டது. பின்னர் இரண்டாவது இரட்டையர் ஆட்டத்தில் ஸ்ருதி - பிரியா ஜோடி தோல்வியை சந்திக்க நேரிட்டது, இதனால் ஸ்கோர் 2-2 ஆனது.

இதையடுத்து நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் அன்மோல் கராப் 21-14, 21-9 என்ற செட் கணக்கில் போர்ன்பிச்சா சோகிவோங்கை வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி முதல்முறையாக தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.


Next Story