ஆசிய விளையாட்டு: நேற்று ஒரே நாளில் இந்தியாவுக்கு 6 பதக்கம்


ஆசிய விளையாட்டு: நேற்று ஒரே நாளில் இந்தியாவுக்கு 6 பதக்கம்
x

image courtesy: Anurag Thakur twitter via ANI

ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று நடந்த துப்பாக்கி சுடுதலில் இந்திய அணி உலக சாதனையுடன் முதல் தங்கப்பதக்கத்தை வென்றது.

ஹாங்சோவ்,

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

3-வது நாளான நேற்று இந்தியா முதல் தங்கப்பதக்கத்தை ருசித்தது. துப்பாக்கி சுடுதலில் ஆண்கள் அணிகள் பிரிவின் 10 மீட்டர் ஏர்ரைபிள் பந்தயத்தில் 14 அணிகள் கலந்து கொண்டன. ருத்ராங்ஷ் பாட்டீல் (632.5 புள்ளி), ஐஸ்வரி பிரதாப்சிங் தோமர் (631.6 புள்ளி), திவ்யான்ஷ் சிங் பன்வார் (629.6 புள்ளி) ஆகியோர் அடங்கிய இந்திய அணி மொத்தம் 1893.7 புள்ளிகள் குவித்து புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. கடந்த மாதம் அஜர்பைஜானில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சீனா 1893.3 புள்ளிகளுடன் படைத்து இருந்த உலக சாதனையை தகர்த்து புதிய சாதனையை படைத்தது. தென்கொரியா (1890.1 புள்ளி) வெள்ளிப்பதக்கமும், சீனா (1888.2 புள்ளி) வெண்கலப்பதக்கமும் பெற்றன.

10 மீட்டர் ஏர்ரைபிள் தனிநபர் பிரிவின் இறுதி சுற்றில் இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப்சிங் தோமர் 228.8 புள்ளிகள் எடுத்து வெண்கலப்பதக்கத்தை சொந்தமாக்கினார். சீன வீரர் லிஹாவ் செங் (253.3 புள்ளி) தங்கப்பதக்கத்தையும், தென்கொரியாவின் காஷூன் பார்க் (251.3 புள்ளி) வெள்ளிப்பதக்கத்தையும் வென்றனர். மற்றொரு இந்திய வீரர் ருத்ராங்ஷ் பாட்டீல் (208.7 புள்ளி) 4-வது இடம் பெற்றார்.

இதே போல் ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம் கிட்டியது. விஜய்வீர் சித்து, அனிஷ் பன்வாலா, ஆதர்ஷ் சிங் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1718 புள்ளிகளுடன் வெண்கலத்தை வசப்படுத்தியது. இந்த போட்டியில் சீனா (1765 புள்ளி) தங்கப்பதக்கத்தையும், தென்கொரியா (1734 புள்ளி) வெள்ளிப்பதக்கத்தையும் கைப்பற்றியது.

துடுப்பு படகு போட்டியில் இந்தியா மேலும் 2 பதக்கங்களை வென்றது. ஆண்களுக்கான 4 பேர் கொண்ட பிரிவு போட்டியில் ஜஸ்விந்தர் சிங், பீம்சிங், புனித் சிங், ஆஷிஷ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 2 ஆயிரம் மீட்டர் தூரத்தை 6 நிமிடம் 10.81 வினாடியில் கடந்து 3-வது இடத்தை பெற்றது. இதில் உஸ்பெகிஸ்தான் (6:04.96 வினாடி) தங்கப்பதக்கமும், சீனா (6:10.04 வினாடி) வெள்ளிப்பதக்கமும் வென்றன.

ஆண்கள் ஸ்கல்ஸ் அணிகள் பிரிவில் சத்னம்சிங், பர்மிந்தர் சிங், ஜாகர்கான், சுக்மீத் சிங் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 6 நிமிடம் 08.61 வினாடியில் பந்தய தூரத்தை எட்டி வெண்கலப்பதக்கத்தை பெற்றது. சீனா, உஸ்பெகிஸ்தான் அணிகள் முறையே தங்கம், வெள்ளிப்பதக்கத்தை அறுவடை செய்தன.

உசூ போட்டியில் பெண்களுக்கான 60 கிலோ எடைப்பிரிவின் கால்இறுதியில் இந்திய வீராங்கனை ரோஷிபினா தேவி, கஜகஸ்தானின் அய்மான் கார்ஷியாவை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் அவர் குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தார்.

ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் பெண்களுக்கான வால்ட் மற்றும் ஆல்-ரவுண்ட் பிரிவில் இந்திய வீராங்கனை பிரனதி நாயக் இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றார்.

டென்னிஸ் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகன் போபண்ணா-யுகி பாம்ப்ரி ஜோடி 2-வது சுற்று ஆட்டத்தில் 3-6, 3-6 என்ற நேர்செட்டில் உஸ்பெகிஸ்தானின் செர்ஜி போமின்-குமோயுன் சுல்தானோவ் இணையிடம் தோற்று வெளியேறியது. மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் ராம்குமார்-சகெத் மைனெனி கூட்டணி 6-3, 6-2 என்ற நேர்செட்டில் இக்னேஷியஸ் சுசான்சோ-டேவிட் சுசான்டோ ஜோடியை சாய்த்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றில் இந்திய வீராங்கனைகள் ருதுஜா, அங்கிதா ரெய்னா ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.

நேற்று ஒரே நாளில் இந்தியா 2 தங்கம், 4 வெண்கலம் என 6 பதக்கங்களை கைப்பற்றியது. 3-வது நாள் முடிவில் சீனா 39 தங்கம், 21 வெள்ளி, 9 வெண்கலம் என்று மொத்தம் 69 பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கிறது. தென்கொரியா 10 தங்கம், 10 வெள்ளி, 13 வெண்கலம் என 33 பதக்கத்துடன் 2-வது இடத்திலும், ஜப்பான் 5 தங்கம், 14 வெள்ளி, 12 வெண்கலம் என 31 பதக்கத்துடன் 3-வது இடத்திலும் உள்ளன. இந்தியா (2 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம்) 11 பதக்கத்துடன் 6-வது இடத்தில் இருக்கிறது.


Next Story