கேன்டிடேட் செஸ்: 2-வது சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வி


கேன்டிடேட் செஸ்: 2-வது சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வி
x

கோப்புப்படம் 

கேன்டிடேட் செஸ் போட்டியில் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார்.

டொரோன்டோ,

உலக சாம்பியனுடன் மோதும் வீரர், வீராங்கனை யார்? என்பதை முடிவு செய்யும் கேன்டிடேட் செஸ் போட்டி கனடாவில் உள்ள டொரோன்டோ நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கு தனித்தனியாக நடைபெறும் இந்த போட்டியில் இரு பிரிவிலும் தகுதி பெற்ற 8 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு வீரரும், மற்றவர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும். மொத்தம் 14 சுற்றுகள் நடைபெறும். இதன் முடிவில் முதலிடம் பிடிக்கும் வீரர், வீராங்கனை உலக செஸ் சாம்பியன் பட்டத்துக்கான போட்டியில் நடப்பு சாம்பியனுடன் மோதுவார்கள்.

இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்கள் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் விதித் குஜராத்தி, உலக தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் ஹிகரு நகமுராவை (அமெரிக்கா) சந்தித்தார். கருப்பு நிற காய்களுடன் ஆடிய விதித் 29-வது நகர்த்தலில் நகமுராவுக்கு அதிர்ச்சி அளித்தார். இதன் மூலம் கடந்த 2022-ம் ஆண்டு கேன்டிடேட்ஸ் போட்டிக்கு பிறகு கிளாசிக்கல் பிரிவில் 47 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்திக்காமல் இருந்த நகமுராவின் வீறுநடை முடிவுக்கு வந்தது.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய கிராண்ட்மாஸ்டர்களான டி.குகேஷ் - பிரக்ஞானந்தா ஆகியோர் மோதினார்கள். இதில் கருப்பு நிற காய்களுடன் ஆடிய 17 வயது டி.குகேஷ் 33-வது நகர்த்தலில் 18 வயது பிரக்ஞானந்தாவை வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் ரஷிய வீரர் இயான் நெபோம்நியாச்சி 45-வது நகர்த்தலில் அலிரெஜா பிரோவ்ஜாவையும் (பிரான்ஸ்), அமெரிக்க வீரர் பேபியானோ காருனா 37-வது நகர்த்தலில் நிஜாத் அபாசவ்வையும் (அஜர்பைஜான்) வீழ்த்தினர். முதல் சுற்றில் எல்லா ஆட்டங்களும் டிராவில் முடிந்து இருந்தது.

பெண்கள் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் சீன வீராங்கனை ஜோங்யி டான் 34-வது நகர்த்தலில் இந்தியாவின் வைஷாலியை தோற்கடித்து தொடர்ச்சியாக 2-வது வெற்றியை ருசித்தார். வைஷாலி, பிரக்ஞானந்தாவின் அக்காள் ஆவார். இன்னொரு ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை அலெக்சாண்ட்ரா கோரியாக்சினா 32-வது நகர்த்தலில் அன்னா முசிசக்கை (உக்ரைன்) சாய்த்தார். கோனெரு ஹம்பி (இந்தியா) - கேத்ரினா லாக்னோ (ரஷியா) மோதிய ஆட்டம் 38-வது நகர்த்தலிலும், நுர்க்யுல் சலிமோவா (பல்கேரியா) - டிங்ஜி லீ (சீனா) இடையிலான ஆட்டம் 38-வது நகர்த்தலிலும் டிராவில் முடிந்தன. 2-வது சுற்று முடிவில் ஜோங்யி டான் 2 புள்ளியுடன் முதலிடத்திலும், அலெக்சாண்ட்ரா 1½ புள்ளியுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.


Next Story