சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: 2-வது சுற்றிலும் குகேஷ் 'டிரா'
இந்திய வீரர் ஹரிகிருஷ்ணா-அலெக்சாண்டர் பிரெட்கே (செர்பியா) இடையிலான ஆட்டம் 69-வது காய்நகர்த்தலில் டிராவில் நிறைவடைந்தது.
சென்னை,
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 8 முன்னணி கிராண்ட்மாஸ்டர்கள் பங்கேற்றுள்ள சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் நடந்து வருகிறது. 7 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் கடைசி சுற்று முடிவில் அதிக புள்ளிகளை பெறும் வீரர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார்.
இதில் 2-வது நாளான நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழகத்தை சேர்ந்த டி.குகேஷ், சக நாட்டவரான அர்ஜூன் எரிகாசியை சந்தித்தார். குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் ஆடினார். 31-வது காய்நகர்த்தலுக்கு பிறகு இருவரும் டிராவில் முடிக்க ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இரு வீரர்களும் தலா ½ புள்ளியை பகிர்ந்தனர். முதல் சுற்றிலும் குகேஷ் டிரா கண்டு இருந்தார். இதேபோல் இந்திய வீரர் ஹரிகிருஷ்ணா-அலெக்சாண்டர் பிரெட்கே (செர்பியா) இடையிலான ஆட்டம் 69-வது காய்நகர்த்தலில் டிராவில் நிறைவடைந்தது.
இதேமாதிரி லெவோன் அரோனியன் (அமெரிக்கா)-பர்ஹாம் மக்சூட்லு (ஈரான்) இடையேயான மோதலும் 30-வது காய்நகர்த்தலில் டிராவில் முடிந்தது. மற்றொரு ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் ஆடிய ஹங்கேரி வீரர் சனான் ஸ்ஜூகிரோவ் 63-வது காய் நகர்த்தலில் பாவெல் எல்ஜனோவை (உக்ரைன்) வீழ்த்தினார். 2-வது சுற்று முடிவில் சனான் ஸ்ஜூகிரோவ், ஹரிகிருஷ்ணா ஆகியோர் தலா 1½ புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கின்றனர்.
3-வது சுற்று ஆட்டங்கள் இன்று மாலை 3 மணிக்கு தொடங்கி நடைபெறும்.