சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ்: இந்திய வீரர் குகேஷ் 4 புள்ளிகளுடன் முன்னிலை


சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ்: இந்திய வீரர் குகேஷ் 4 புள்ளிகளுடன் முன்னிலை
x

கடைசி சுற்று ஆட்டம் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது.

சென்னை,

8 முன்னணி கிராண்ட்மாஸ்டர்கள் பங்கேற்றுள்ள சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் நேற்று 6-வது சுற்று நடந்தது. இதன் ஒரு ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் ஆடிய இந்திய வீரர் அர்ஜூன் எரிகாசி 40-வது காய்நகர்த்தலில் பர்ஹாம் மக்சூட்லுவை (ஈரான்) தோற்கடித்தார்.

ஹரிகிருஷ்ணா (இந்தியா)-சனான் ஸ்ஜூகிரோவ் (ஹங்கேரி) இடையிலான ஆட்டம் 42-வது காய்நகர்த்தலிலும், அலெக்சாண்டர் பிரெட்கே (செர்பியா)-லெவோன் அரோனியன் (அமெரிக்கா) இடையிலான மோதல் 32-வது காய் நகர்த்தலிலும், தமிழக வீரர் டி.குகேஷ்-பாவெல் எல்ஜனோவ் (உக்ரைன்) இடையிலான ஆட்டம் 30-வது காய் நகர்த்தலிலும் டிராவில் முடிந்தன.

6-வது சுற்று முடிவில் இந்திய வீரர் குகேஷ் 4 புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறார். ஹரிகிருஷ்ணா, எல்ஜனோவ், அர்ஜூன் எரிகாசி ஆகியோர் தலா 3½ புள்ளிகளுடன் அடுத்த இடத்தில் உள்ளனர். 7-வது மற்றும் கடைசி சுற்று ஆட்டம் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கி நடைபெறும். தனது கடைசி சுற்றில் குகேஷ் வெற்றி பெற்றால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார்.


Next Story