சென்னை பல்கலைக்கழக தடகளம்: 400 மீட்டர் தடை ஓட்டத்தில் அஸ்வின் கிருஷ்ணன் புதிய சாதனை


சென்னை பல்கலைக்கழக தடகளம்: 400 மீட்டர் தடை ஓட்டத்தில் அஸ்வின் கிருஷ்ணன் புதிய சாதனை
x

சென்னை பல்கலைக்கழக தடகள போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் லயோலா கல்லூரி வீரர் அஸ்வின் கிருஷ்ணன் புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.

சென்னை,

சென்னை பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கான 54-வது ஏ.எல். முதலியார் பொன்விழா நினைவு தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. போட்டியை சென்னை பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.ஏழுமலை தொடங்கி வைத்தார். 79 கல்லூரிகளை சேர்ந்த 1,600 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் ஆண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் லயோலா கல்லூரி வீரர் அஸ்வின் கிருஷ்ணன் 52.34 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வென்றார். இதற்கு முன்பு 2019-2020-ம் ஆண்டில் எம்.சி.சி. வீரர் பிரகாஷ் பார்த்திபன் 52.59 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தகர்த்தார்.

5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் சாதனை

5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் லயோலா கல்லூரி வீரர் ஹரிஓம் திவாரி 14 நிமிடம் 13.1 வினாடியில் இலக்கை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். அவர் 2009-2010-ம் ஆண்டில் ஏ.எம்.ஜெயின் கல்லூரி வீரர் 14 நிமிடம் 59.6 வினாடியில் பந்தய தூரத்தை கடந்த சாதனையை முறியடித்தார். அப்துல் பாரி (டி.ஜி.வைஷ்ணவா), உபேந்திர பால் (லயோலா) முறையே வெள்ளி, வெண்கலப்பதக்கம் பெற்றனர்.

போல்வால்ட்டில் ஞானசோனியும் (லயோலா), சங்கிலி குண்டு எறிதலில் தினேசும் (எம்.சி.சி.), 800 மீட்டர் ஓட்டத்தில் சோம்நாத் சவுகானும் (டி.ஜி.வைஷ்ணவா), டிரிபிள்ஜம்ப்பில் பிரவீனும் (டி.ஜி.வைஷ்ணவா). ஈட்டி எறிதலில் மாதேஸ்வரனும் (எம்.சி.சி.) தங்கப்பதக்கத்தை கைப்பற்றினர்.

திவ்யா புதிய சாதனை

பெண்களுக்கான 400 மீட்டர் தடை ஓட்டத்தில் எத்திராஜ் கல்லூரி வீராங்கனை சுமத்ரா 59.35 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். இதற்கு முன்பு 2016-2017-ம் ஆண்டில் எத்திராஜ் வீராங்கனை விஷ்வபிரியா 1 நிமிடம் 0.99 வினாடியில் கடந்ததே சாதனையாக இருந்தது.

சங்கிலி குண்டு எறிதலில் எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி வீராங்கனை திவ்யா சன்டில்யா 50.87 மீட்டர் தூரம் வீசி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வென்றார். 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் கீதாஞ்சலியும் (எம்.ஓ.பி.வைஷ்ணவா), உயரம் தாண்டுதலில் ராஜேஸ்வரியும் (எஸ்.டி.என்.பி.வைஷ்ணவா), 800 மீட்டர் ஓட்டத்தில் கவிதாவும் (எம்.ஓ.பி.வைஷ்ணவா), போல்வால்ட்டில் யுவதர்ஷினியும் (எம்.ஓ.பி.வைஷ்ணவா), குண்டு எறிதலில் வைஷ்ணவியும் (பச்சையப்பா), டிரிபிள்ஜம்ப்பில் பபிஷாவும் (எம்.ஓ.பி.வைஷ்ணவா) தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தனர்.

இந்த போட்டி இன்றும், நாளையும் தொடர்ந்து நடைபெறுகிறது.


Next Story