சென்னை பல்கலைக்கழக தடகளம்: எம்.ஓ.பி.வைஷ்ணவா அணி தொடர்ந்து 19-வது முறையாக 'சாம்பியன்'


சென்னை பல்கலைக்கழக தடகளம்: எம்.ஓ.பி.வைஷ்ணவா அணி தொடர்ந்து 19-வது முறையாக சாம்பியன்
x

ஆண்கள் பிரிவில் டி.ஜி.வைஷ்ணவா 2-வது முறையாக சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது.

சென்னை,

சென்னை பல்கலைக்கழகம் சார்பில் 55-வது டாக்டர் ஏ.எல். முதலியார் பொன்விழா நினைவு தடகள போட்டி சென்னையை அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் கடந்த 3 நாட்கள் நடந்தது.

இதில் கடைசி நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான பாதி மாரத்தானில் லயோலா வீரர் ஹாரிம் திவாரி (1 மணி 05.11 வினாடி) புதிய போட்டி சாதனையுடன் முதலிடம் பிடித்தார். நீளம் தாண்டுதலில் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி வீரர் விஷ்ணு (7.88 மீட்டர்), 1,500 மீட்டர் ஓட்டத்தில் சத்ய தேவ் (3 நிமிடம் 46.09 வினாடி), பெண்களுக்கான ஹெப்டத்லானில் தீபிகா (5,082 புள்ளி) ஆகியோர் புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினர்.

3 நாள் போட்டி முடிவில் ஆண்கள் பிரிவில் டி.ஜி.வைஷ்ணவா (10 தங்கம், 10 வெள்ளி, 4 வெண்கலம்) 2-வது முறையாக சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது. 45 முறைக்கு மேலாக சாம்பியன் பட்டத்தை வென்று ஆதிக்கம் செலுத்திய லயோலா (9 தங்கம், ஒரு வெள்ளி, 8 வெண்கலம்) 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

பெண்கள் பிரிவில் எம்.ஓ.பி.வைஷ்ணவா (14 தங்கம், 12 வெள்ளி, 5 வெண்கலம்) தொடர்ந்து 19-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. எத்திராஜ் கல்லூரி (4 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம்) 2-வது இடம் பெற்றது. சிறந்த வீராங்கனையாக மரியா நிவேதா (எம்.ஓ.பி.வைஷ்ணவா), சிறந்த வீரராக விஷ்ணு (டி.ஜி.வைஷ்ணவா) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் சென்னை பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் வி.மகாதேவன் கலந்து கொண்டு வெற்றி, பெற்ற கல்லூரிகளுக்கு பரிசு கோப்பையை வழங்கினார்.


Next Story