செஸ் ஒலிம்பியாட்: மிக குறுகிய காலத்தில் வியக்கத்தக்க ஏற்பாடுகள் - சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவர் பாராட்டு


செஸ் ஒலிம்பியாட்: மிக குறுகிய காலத்தில் வியக்கத்தக்க ஏற்பாடுகள் - சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவர் பாராட்டு
x

Image Courtesy : DT Next

மிக குறுகிய காலத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகள் வியக்கத்தக்க வகையில் செய்யப்பட்டுள்ளது என்று சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவர் பாராட்டினார்.

சென்னை,

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாயிண்ட்ஸ் நட்சத்திர விடுதி வளாகத்தில் நடக்கிறது. தமிழக அரசின் ஆதரவுடன் நடைபெறும் இந்த சிறப்பு மிக்க செஸ் ஒலிம்பியாட் போட்டியின் பிரமாண்டமான தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடந்தது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

வருகிற 10-ந் தேதி வரை நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக நவீன வசதிகளுடன் இரண்டு பெரிய அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு அரங்கில் 196 செஸ் போர்டுகளும், மற்றொரு அரங்கில் 512 செஸ் போர்டுகளும் மேஜையில் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த போட்டியை முன்னிட்டு சர்வதேச செஸ் கூட்டமைப்பு (பிடே) தலைவர் அர்கடி துவார்கோவிச், அகில இந்திய செஸ் சம்மேளன தலைவர் சஞ்சய் கபூர், பொதுச்செயலாளர் பரத் சிங் சவுகான் ஆகியோர் போட்டி நடைபெறும் இடத்தில் நேற்று நிருபர்களை சந்தித்தனர். அப்போது 'பிடே' தலைவர் அர்கடி துவார்கோவிச் கூறியதாவது;-

"செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தமிழக அரசு அளித்து வரும் ஆதரவுக்காக நாங்கள் நன்றி கடன்பட்டு இருக்கிறோம். தற்போது எங்களது கவனம் எல்லாம் செஸ் ஒலிம்பியாட் மீது தான் இருக்கிறது. அது தான் மிகவும் முக்கியமானதாகும். செஸ் ஒலிம்பியாட் போட்டி மிகப்பெரிய திருவிழாவாகும். இது ஒரு விளையாட்டு மட்டுமல்ல. இந்த போட்டி உற்சாகமான, மகிழ்ச்சியான சூழலை உருவாக்குவதுடன் எல்லோரையும் ஒன்றிணைக்கிறது.

'பிடே'வின் துணை தலைவர் பதவிக்கு முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் போட்டியிடுவது பெருமை அளிக்கிறது. அவர் செஸ் விளையாட்டுக்கு அளித்து இருக்கும் பங்களிப்பு உலகம் முழுவதும் தெரியும். அவரது பங்களிப்புக்கு 'பிடே' அங்கீகாரம் அளித்து இருக்கிறது. வருங்காலத்திலும் அவருக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும்.

வழக்கமாக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்தும் நாடு எது? என்பது இரண்டு வருடங்களுக்கு முன்பே முடிவு செய்யப்படும். அதனால் அவர்களுக்கு போட்டியை நடத்துவதற்கு நிறைய நேரம் கிடைக்கும். ஆனால் 4 மாதங்களுக்கு முன்பு தான் இந்த போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. இருப்பினும் மிக குறுகிய காலத்துக்குள் வியக்கவைக்கும் வகையில் இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். இந்த போட்டிக்காக எல்லோரும் ஒருங்கிணைந்து கடுமையாக உழைத்து இருப்பது பெருமை அளிக்கிறது.

அடுத்த ஆண்டுக்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடுவதில்லை என்று நடப்பு சாம்பியனான மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) எடுத்து இருக்கும் முடிவை நாங்கள் மதிக்கிறோம். அவர் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தனது நாட்டு அணிக்காக விளையாடுவது மகிழ்ச்சியான விஷயமாகும். கடந்த 10 ஆண்டுகளாக அவர் வலுவான வீரராக விளங்கி வருகிறார். அடுத்த சில வருடங்களில் அவரை பலமுறை நாம் களத்தில் பார்க்க முடியும் என்று நம்புகிறோம்"

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story