செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவு: இந்திய பி அணி வீரர் ஹரி கிருஷ்ணா வெற்றி


செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவு: இந்திய பி அணி வீரர் ஹரி கிருஷ்ணா வெற்றி
x

செஸ் ஒலிம்பியாட் ஓபன் பிரிவில் இந்திய பி அணி வீரர் ஹரி கிருஷ்ணா உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக்கை வீழ்த்தினார்

சென்னை,

ஜூலை 28-ம் தேதி முதல் மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தப் போட்டியில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 11 சுற்றுகளை கொண்ட இந்தப் போட்டி சுவிஸ் முறையில் நடத்தப்படுகிறது. இந்தப்போட்டியில் இந்தியா சார்பில் 6 அணிகள் பங்கேற்று உள்ளன. ஆண்கள் பிரிவில் 3 அணியும், பெண்கள் பிரிவில் 3 அணியும் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

இன்று நடைபெற்ற 6-வது சுற்று போட்டியில் ஆண்களுக்கான இந்திய 'பி' அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் குகேஷ் ஆர்மீனியா வீரர் சர்கிஷியன் ஆகியோர் மோதினர். இதில் 41-வது நகர்த்தலில் சார்கிஷியனை வீழ்த்தி குகேஷ் வெற்றி பெற்றார்.

மேலும் இந்திய மகளிர் ஏ அணியில் இடம் பெற்றுள்ள தமிழக வீராங்கனை வைஷாலி வெற்றி பெற்றார். வெள்ளை நிறக் காய்களுடன் விளையாடிய வைஷாலி, ஜார்ஜியவின் ஜவகிஷ்விலி லேலாவை எதிர்கொண்டபோது 36-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதன் மூலம் ஜார்ஜியா அணியை இந்திய மகளிர் ஏ அணி 3:1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது.

இந்த நிலையில் ஓபன் பிரிவில் இந்திய பி அணி வீரர் ஹரி கிருஷ்ணா உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக்குடன் மோதினார். இந்த போட்டியில் கருப்புக் காய்களுடன் விளையாடி ஹரி கிருஷ்ணா 34-வது நகர்த்தலில் நோடிர்பெக்கை வீழ்த்தி வெற்றி பெற்றார்.


Next Story