காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் பாராட்டு


காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் பாராட்டு
x

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி இந்திய ஒலிம்பிக் சங்கம் பாராட்டி உள்ளது.

புதுடெல்லி,

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் 22-வதுகாமன்வெல்த் விளையாட்டு போட்டி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் உள்ளிட்ட மொத்தம் 61 பதக்கங்களை இந்தியா வென்றது. அதிகபட்சமாக தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் 4 பதக்கம் வென்றார். பதக்கப் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தை பிடித்தது.

இதனையடுத்து, இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில் டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. இதில் தங்கப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.20 லட்சமும், வெள்ளி பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.10 லட்சமும், வெண்கல பதக்கத்தை கைப்பற்றியவர்களுக்கு ரூ.7½ லட்சமும் ஊக்கத் தொகையாக இந்திய ஒலிம்பிக் சங்கம் வழங்கியது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய ஒலிம்பிக் சங்க தற்காலிக தலைவர் அனில் கண்ணா பேசியதாவது:- காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவர்களை பாராட்டுகிறேன். 2026-ம் ஆண்டு நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டில் துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம் ஆகிய போட்டிகள் இடம்பெறுவது தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திடம் இந்தியா முறையிடும். 2026-ம் ஆண்டுக்கான விளையாட்டு குழுவுக்கு இது தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story