ஆசிய விளையாட்டு போட்டியில் கடைசி முறையாக கால்பதிக்கும் இந்திய நட்சத்திரங்கள்


ஆசிய விளையாட்டு போட்டியில் கடைசி முறையாக கால்பதிக்கும் இந்திய நட்சத்திரங்கள்
x

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் வருகிற 23-ந்தேதி முதல் அக்டோபர் 8-ந்தேதி வரை நடக்கிறது.

புதுடெல்லி,

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் வருகிற 23-ந்தேதி முதல் அக்டோபர் 8-ந்தேதி வரை நடக்கிறது. ஒலிம்பிக் போட்டிக்கு அடுத்து மிகப்பெரிய போட்டியாக வர்ணிக்கப்படும் இந்த ஆசிய விளையாட்டில் இந்தியா சார்பில் 665 வீரர், வீராங்கனைகள் 41 வகையான பந்தயங்களில் பங்கேற்க உள்ளனர்.

இந்தியாவின் பல நட்சத்திர வீரர், வீராங்கனைகளுக்கு இதுவே கடைசி ஆசிய விளையாட்டு போட்டியாக இருக்கப்போகிறது. அவர்கள் பதக்கத்துடன் விடைபெறும் உத்வேகத்துடன் ஆயத்தமாகி வருகிறார்கள். அத்தகைய வீரர்கள் பற்றிய ஒரு பார்வை:-

ரோகன் போபண்ணா (டென்னிஸ்): 43 வயதான ரோகன் போபண்ணா சமீபத்தில் அமெரிக்க ஓபன் டென்னிசில் இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டி வரை முன்னேறி சாதனை படைத்தார். வயதானாலும் அவரது ஆட்டத்திறன் மெருகேறிக்கொண்டே போகிறது. நேற்று முன்தினம் டேவிஸ் கோப்பை டென்னிசில் இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். அத்துடன் அவர் டேவிஸ் கோப்பை டென்னிசில் இருந்து ஓய்வு பெற்றார். 2002-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் அறிமுகமான ரோகன் போபண்ணா 2018-ம் ஆண்டு தொடரில் திவிஜ் சரணுடன் இணைந்து தங்கப்பதக்கம் வென்றார். இந்த முறை யுகி பாம்ப்ரியுடன் கைகோர்த்து களம் காணும் அவர் இத்துடன் ஆசிய போட்டி பயணத்தையும் நிறைவு செய்கிறார்.

சரத் கமல் (டேபிள் டென்னிஸ்): தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரரான 41 வயதான சரத்கமல் கடந்த ஆண்டு பர்மிங்காமில் நடந்த காமன்வெல்த் விளையாட்டில் 3 தங்கப்பதக்கங்களை கைப்பற்றி வியக்க வைத்தார். ஆனால் காமன்வெல்த் போட்டியை விட ஆசிய விளையாட்டில் சவால் அதிகம். இங்கு பதக்கம் வெல்வது எளிதான காரியம் அல்ல. 5-வது முறையாக ஆசிய விளையாட்டில் அடியெடுத்து வைக்கும் சரத் கமல் இரண்டு பதக்கங்களை குறி வைக்கிறார். கடந்த தொடரில் இந்திய ஆண்கள் அணி வெண்கலம் வென்று 60 ஆண்டுகால ஏக்கத்தை தணித்தது. இந்த முறையும் அவர் அசத்தினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இரட்டையர் பிரிவில் சக மாநில வீரர் ஜி.சத்யனுடன் ஜோடி சேரும் அவருக்கு இதுவே கடைசி ஆசிய விளையாட்டு என்பதில் சந்தேகமில்லை.

பி.ஆர்.ஸ்ரீஜேஷ் (ஆக்கி): டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா வெண்கலப்பதக்கம் வென்றதில் முக்கிய பங்கு வகித்த கோல் கீப்பர் 35 வயதான ஸ்ரீஜேஷ் தனது ஆக்கி வாழ்க்கையில் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டார். இப்போது ஒவ்வொரு தொடராக கவனத்தில் கொண்டு செயல்படுவதாக கூறும் ஸ்ரீஜேஷ்க்கு இதுவே கடைசி ஆசிய விளையாட்டு போட்டி என்பதில் ஐயமில்லை. ஆக்கியில் ஆசிய விளையாட்டில் மகுடம் சூடும் அணி நேரடியாக பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் களத்தில் தனது முழு திறமையை வெளிப்படுத்த முயற்சிப்பார். இந்திய அணிக்காக 301 சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ள ஸ்ரீஜேஷ் தற்போது கோல் கீப்பிங் பணியை இளம் வீரர் கிரிஷன் பஹதுர் பதக்கிடம் அவ்வப்போது பகிர்ந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

தீபிகா பலிக்கல் (ஸ்குவாஷ்): இரட்டை குழந்தைகளின் தாயாரான சென்னையை சேர்ந்த தீபிகா பலிக்கல், பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் மனைவி ஆவார். அவருக்கு இது 4-வது மற்றும் கடைசி ஆசிய விளையாட்டாக இருக்கும். குழந்தைக்காக சிறிது காலம் ஒதுங்கி இருந்த தீபிகா கடந்த ஆண்டு இரட்டையர் பிரிவில் ஜோஷ்னா மற்றும் சவுரவ் கோஷலுடன் இணைந்து விளையாடி உலக ஸ்குவாஷ் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்று கவனத்தை ஈர்த்தார். ஆசிய விளையாட்டில் இதுவரை 4 பதக்கம் பெற்று இருக்கும் 32 வயதான தீபிகா இந்த முறை ஹரிந்தர்பால் சந்துவுடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவில் மட்டும் களம் இறங்குகிறார்.

பஜ்ரங் பூனியா (மல்யுத்தம்): அரியானாவைச் சேர்ந்த 29 வயதான பஜ்ரங் பூனியா மல்யுத்தத்தில் சாம்பியன் வீரராக வலம் வருகிறார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்துக்கு முத்தமிட்ட பஜ்ரங் பூனியா, பாலியல் சர்ச்சையில் சிக்கிய இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக போராட்டத்தை முன்னின்று நடத்தியவர். அந்த போராட்டத்துக்கு பிறகு அவர் கலந்து கொள்ளும் முதல் போட்டி இது தான். 2018-ம் ஆண்டு ஜகர்த்தா ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கத்தை ருசித்த பஜ்ரங் பூனியா (65 கிலோ உடல் எடைப் பிரிவு) அதை தக்கவைப்பதில் தீவிரம் காட்டுவார். அவருக்கும் இது தான் கடைசி ஆசிய விளையாட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீமா பூனியா (வட்டு எறிதல்): 40 வயதான சீமா பூனியா முந்தைய இரு ஆசிய விளையாட்டுகளில் முறையே தங்கம் மற்றும் வெண்கலப்பதக்கம் வென்று இருந்தார். கடந்த ஆண்டு காமன்வெல்த் விளையாட்டில் ஏமாற்றம் அளித்த சீமாவுக்கு பெரிய போட்டியில் பதக்கமேடையில் ஏறுவதற்கு இதுவே இறுதி வாய்ப்பாகும்.

இதே போல் சுனில் சேத்ரி (கால்பந்து), அங்கிதா ரெய்னா (டென்னிஸ்), அஸ்வினி பொன்னப்பா (பேட்மிண்டன்) உள்ளிட்டோருக்கும் இதுவே கடைசி ஆசிய விளையாட்டாக இருக்கும் என்று கருதப்படுகிறது.


Next Story